கரோனா பாதுகாப்பு வளையத்தில் நீண்ட நாள் விளையாடுவது கடினம்: விராட் கோலி
ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது நிலைமை கடினமாகி விடும்...
கரோனா பாதுகாப்பு வளையத்தில் நீண்ட நாள் விளையாடுவது கடினம் என்று ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் அங்குச் சென்றுள்ள வீரர்கள், கரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளார்கள். இதன்மூலம் வீரர்கள் யாரும் அனுமதி தரப்படாத இடங்களுக்குச் செல்லக்கூடாது. அதேபோல வெளி ஆள்களும் வீரர்களைச் சந்தித்துப் பேசக்கூடாது. இந்த வாழ்க்கை முறை பற்றி ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
கரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் வாழ்வதால் ஒரே செயலைத் தொடர்ந்து செய்வது போல இருக்கிறது. அருமையான அணி வீரர்கள் அமைந்துவிட்டால் இது கடினமாக இருக்காது. எங்களுக்கு அப்படி ஓர் அணி அமைந்துள்ளது. அதனால் தான் ஒன்றாக விளையாடுவதில் மகிழ்ச்சியாக உள்ளோம். கரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் வாழும் வாழ்க்கையையும் அனுபவித்து வருகிறோம். ஆனால் ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது நிலைமை கடினமாகி விடும்.
போட்டி அல்லது தொடரின் கால அளவு குறித்து கருத்தில் கொள்ள வேண்டும். இதே சூழலில் 80 நாள்களுக்கு வீரர்கள் இருக்கும்போது அதனால் ஏற்படும் தாக்கம் பற்றியும் யோசிக்க வேண்டும். அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களைப் பார்க்க அனுமதியளிக்கப்படுவது குறித்தும் யோசிக்க வேண்டும். இந்த விஷயங்களைத் தீவிரமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். வீரர்கள் நல்ல மனநிலையில் இருக்கவேண்டிய அவசியம் என்றார்.