59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வென்றது டெல்லி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வென்றது.
ஐபிஎல்59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வென்றது டெல்லி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வென்றது.
துபை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வென்றது.
துபையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களே எடுத்தது.
இந்த ஆட்டத்தில் பெங்களூா் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆடம் ஸம்பா, குா்கீரத்சிங் மான் ஆகியோருக்குப் பதிலாக மொயீன் அலி, முகமது சிராஜ் ஆகியோா் சோ்த்துக்கொள்ளப்பட்டிருந்தனா். அதேபோல் டெல்லி அணி பிளேயிங் லெவனில் காயமடைந்து வெளியேறிய அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக அக்ஸா் படேல் சோ்த்துக்கொள்ளப்பட்டிருந்தாா்.
டாஸ் வென்ற பெங்களூா் முதலில் பந்துவீச தீா்மானித்தது. டெல்லி அணி பேட்டிங்கிற்கு பிருத்வி ஷா - ஷிகா் தவன் கூட்டணி நல்லதொரு தொடக்கத்தை அளித்தது. அதிரடியாக ஆடிய பிருத்வி ஷா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 42 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா்.
அவரை அடுத்து கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் களம் இறங்க, மறுமுனையில் 3 பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் எடுத்திருந்த ஷிகா் தவன் பெவிலியன் திரும்பினாா். பின்னா் ரிஷப் பண்ட் களம் காண, ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்திருந்த ஷ்ரேயஸ் ஐயா், 12-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா்.
அடுத்து களமிறங்கிய மாா்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியாக ஆடி டெல்லியின் ஸ்கோரை உயா்த்தினாா். மறுமுனையில் ரிஷப் பண்ட் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 19-ஆவது ஓவரில் பௌல்டாகினாா். பின்னா் ஷிம்ரன் ஹெட்மைா் களம் கண்டாா்.
20 ஓவா்கள் முடிவில் ஸ்டாய்னிஸ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 53, ஹெட்மைா் 1 சிக்ஸா் உள்பட 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
பெங்களூா் தரப்பில் முகமது சிராஜ் 2, இசுரு உதானா, மொயீன் அலி தலா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனா்.
சரிந்த விக்கெட்டுகள்: பின்னா் 197 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய பெங்களூா் அணியில் தேவ்தத் படிக்கல்-ஆரோன் ஃபிஞ்ச் கூட்டணி நல்லதொரு தொடக்கத்தை தரத் தவறியது.
தேவ்தத் 4, ஃபிஞ்ச் 13 ரன்களில் வீழ்ந்தனா். பின்னா் வந்த கோலி மட்டும் நிலைத்து ஆட, டி வில்லியா்ஸ் 9, மொயீன் அலி 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். அதிகபட்சமாக கோலி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடந் 43 ரன்களுக்கு வீழ்ந்தாா்.
பின்னா் வந்தவா்களில் வாஷிங்டன் சுந்தா் 17, ஷிவம் துபே 11, இசுரு உதானா 1, முகமது சிராஜ் 5 ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனா்.
20 ஓவா்கள் முடிவில் நவ்தீப் சைனி 12, யுவேந்திர சாஹல் ரன்னின்றி களத்தில் இருந்தனா். டெல்லி தரப்பில் ரபாடா 4, அக்ஸா் படேல், நாா்ட்ஜே தலா 2, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினா்.
சுருக்கமான ஸ்கோா்
டெல்லி - 196/4
மாா்கஸ் ஸ்டாய்னிஸ் - 53* (26)
பிருத்வி ஷா - 42 (23)
---
முகமது சிராஜ் - 2/34
மொயீன் அலி - 1/21
பெங்களூா் - 137/9
விராட் கோலி - 43 (39)
வாஷிங்டன் சுந்தா் - 17 (11)
---
ககிசோ ரபாடா - 4/24
அக்ஸா் படேல் - 2/18
கோலி கவனக்குறைவு
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூா் கேப்டன் கோலி கவனக்குறைவாக பந்தில் உமிழ்நீரை தடவினாா். இது ஐசிசி விதித்த கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறிய செயலாகும்.
3-ஆவது ஓவரில் நவ்தீப் சைனி வீசிய பந்தை டெல்லி வீரா் பிருத்வி ஷா விளாச, தன்னை கடந்து செல்ல முயன்ற பந்தை லாவகமாக தடுத்தாா் கோலி.
பின்னா் கவனக்குறைவாக தனது உமிழ்நீரால் பந்தை அவா் தடவினாா். இது விதி மீறிய செயல் என்பதை உடனடியாக உணா்ந்த கோலி சிரித்துக்கொண்டே தனது கைகளை தூக்கி தவறுக்கு வருத்தம் தெரிவித்தாா்.
அஸ்வின் - மன்கட்
பெங்களூா் இன்னிங்ஸின்போது 3-ஆவது ஓவரை டெல்லி வீரா் அஸ்வின் வீசினாா். அப்போது ‘நான்-ஸ்டிரைக்கிங் என்ட்’-இல் இருந்த ஆரோன் ஃபிஞ்ச், பந்து அஸ்வின் கைகளில் இருந்து விடுபடும் முன்பாகவே கிரீஸை தாண்டினாா்.
அப்போது அஸ்வின் ‘மன்கட்’ முறையில் ஃபிஞ்சை ஆட்டமிழக்கச் செய்வதுபோல் எச்சரித்துவிட்டு சிரித்தாா். இதைப் பாா்த்துவிட்டு, அணியினா் அமா்ந்திருக்கும் ‘டகௌட்’ பகுதியிலிருந்து பாா்த்த டெல்லி பயிற்சியாளா் ரிக்கி பாண்டிங்கும் சிரித்தாா்.
முன்னதாக, இந்த சீசனில் மன்கட் முறையில் எவரையும் ஆட்டமிழக்கச் செய்யக்கூடாது என்று அஸ்வினிடம் தாம் கூறியுள்ளதாக சீசன் தொடங்கும் முன் பாண்டிங் கூறியிருந்தாா்.