ஐபிஎல்: விராட் கோலி புதிய சாதனை
ஒவ்வொரு பருவத்திலும் 300-க்கும் அதிகமான ரன்களை எடுத்த ஒரே வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக 13 வருடங்களாக ஒவ்வொரு பருவத்திலும் 300-க்கும் அதிகமான ரன்களை எடுத்த ஒரே வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
ஆர்சிபி அணிக்காக 2008 முதல் விளையாடி வருகிறார் கோலி. முதல் இரண்டு வருடங்களில் 165, 246 ரன்களை எடுத்தார். 2010-ல் 307 ரன்களை எடுத்தார். அதன்பிறகு இந்த வருடம் வரை 13 வருடங்களாக ஓவ்வொரு பருவத்திலும் 300 ரன்களுக்குக் குறையாமல் எடுத்துள்ளார். இந்தச் சாதனை வேறு எந்த வீரருக்கும் கிடையாது.
நேற்றைய ஆட்டத்தில் அரை சதம் எடுத்த கோலி, இந்த வருடமும் 300 ரன்களைக் கடந்துள்ளார். 14 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 309 ரன்கள் எடுத்துள்ளார்.
கோலியின் சாதனையைப் படிக்கும்போது உங்களுக்கு சில வீரர்களின் பெயர்கள் ஞாபகம் வரலாம். சுரேஷ் ரெய்னா 2008 முதல் 2019 வரை 12 வருடங்களிலும் குறைந்தது 350 ரன்கள் எடுத்தார். 2020-ல் அவர் விளையாடவில்லை. 2021-ல் மொத்தமாக 160 ரன்கள் தான் எடுத்தார். இதனால் ரெய்னாவால் கோலி போல சாதனை செய்ய முடியாமல் போய்விட்டது. அதேபோல ரோஹித் சர்மா, 2018-ல் மட்டும் 300 ரன்களுக்குக் குறைவாக எடுத்துவிட்டார். அதனால் அவராலும் இந்தச் சாதனையை நிகழ்த்த முடியாமல் போய்விட்டது. ஷிகர் தவன், இரண்டு வருடங்களில் (2009, 2010) இந்த இலக்கை எட்டவில்லை.