முகப்பு
ஐபிஎல்

பெங்களூரை வீழ்த்தியது லக்னௌ

Updated On : 3 ஏப்ரல், 2024 at 2:06 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 11:55 PM

பெங்களூரு: ஐபிஎல் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை அதன் மண்ணிலேயே செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

முதலில் லக்னெள 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுக்க, பெங்களூரு 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

லக்னெள பேட்டிங்கில் குவின்டன் டி காக், நிகோலஸ் பூரனும், பெளலிங்கில் மயங்க் யாதவும் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். பெங்களூரு அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் தடுமாறியது.

Advertisement

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு, பந்துவீசத் தீர்மானித்தது. லக்னெள இன்னிங்ûஸ தொடங்கியோரில் கேப்டன் கே.எல்.ராகுல் 2 சிக்ஸர்கள் விளாசி 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

மறுபுறம், அதிரடியாக விளாசி ரன்கள் சேர்த்து வந்த குவின்டன் டி காக்குடன் 4-ஆவது பேட்டராக இணைந்தார் மார்கஸ் ஸ்டாய்னிஸ். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. இதில் ஸ்டாய்னிஸ் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 24 ரன்களுக்கு நடையைக்கட்டினார்.

அடுத்து, நிகோலஸ் பூரன் பேட் செய்ய வர, அதுவரை பெங்களூரு பெளலர்களை பதறடித்த டி காக், 56 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 81 ரன்கள் விளாசி வீழ்ந்தார். கடைசி விக்கெட்டாக ஆயுஷ் பதோனி டக் அவுட்டானார். ஓவர்கள் முடிவில் பூரன் 21 பந்துகளில் 1 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 40, கிருணால் பாண்டியா 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு பெளலர்களில் கிளென் மேக்ஸ்வெல் 2, ரீஸ் டாப்லி, யஷ் தயாள், முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் சரித்தனர்.

அடுத்து, 182 ரன்களை நோக்கி விளையாடிய பெங்களூரு தரப்பில், தொடக்க வீரர் விராட் கோலி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கிளென் மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, கேமரூன் கிரீனும் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பியதால் பெங்களூரு அணி தடுமாற்றம் கண்டது. அனுஜ் ராவத் 11 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்க, ரஜத் பட்டிதார் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 29 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார்.

தினேஷ் கார்த்திக் 4, மயங்க் தாகர் 0 ரன்களுக்கு நடையைக் கட்டினர். அதிரடியாக விளாசி ரன்கள் சேர்த்த மஹிபால் லோம்ரோர், 13 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக முகமது சிராஜ் 2 சிக்ஸர்களுடன் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

லக்னெள பெளலர்களில் மயங்க் யாதவ் 3, நவீன் உல் ஹக் 2, மணிமாறன் சித்தார்த், யஷ் தாக்குர், மார்கஸ் ஸ்யாட்னிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

புள்ளிகள் பட்டியல்

ராஜஸ்தான் 3 3 0 6 1.249

கொல்கத்தா 2 2 0 4 1.047

சென்னை 3 2 1 4 0.976

லக்னௌ 3 2 1 4 0.483

குஜராத் 3 2 1 4 -0.738

ஹைதராபாத் 3 1 2 2 0.204

டெல்லி 3 1 2 2 -0.016

பஞ்சாப் 3 1 2 2 -0.337

பெங்களூரு 4 1 3 2 -0.876

மும்பை 3 0 3 0 -1.423

ஆட்டத்தின்

தேதிகள் மாற்றம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கொல்கத்தா நகரில் வரும் 17-ஆம் தேதி மோதவிருந்த ஆட்டம், 16-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும், குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் அகமதாபாத் நகரில் வரும் 16-ஆம் தேதி விளையாடவிருந்த ஆட்டம், 17-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும் பிசிசிஐ செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதில், 17-ஆம் தேதி ராம நவமி கொண்டாட்டப்படுவதால், அதே நாளில் நடைபெறும் கொல்கத்தா - ராஜஸ்தான் ஆட்டத்துக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருப்பதாக கொல்கத்தா காவல்துறை தெரிவித்ததை அடுத்து, பெங்கால் கிரிக்கெட் சங்கம் ஏற்கெனவே வலியுறுத்தியதன் பேரில் அந்த ஆட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது. எனினும், குஜராத் - டெல்லி ஆட்டத்தின் தேதி மாற்றப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இன்றைய ஆட்டம்

டெல்லி - கொல்கத்தா

நேரம்:

இரவு 7.30 மணி

இடம்: விசாகப்பட்டினம்

நேரலை:

ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா