அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடக் கூடாது எனக் கூறுவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லையென இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியை ருதுராஜிடம் ஒப்படைத்துவிட்டு, ஒரு சாதாரண வீரராக அணியில் எம்.எஸ்.தோனி விளையாடினார். ஆட்டத்தின் இறுதியில் களமிறங்கி அதிரடியை வெளிப்படுத்திய எம்.எஸ்.தோனியின் ஆட்டம் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் சிஎஸ்கே வெளியேறிய பிறகு, அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடக் கூடாது எனக் கூறுவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லையென இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முகமது கைஃப் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியதாவது: எம்.எஸ்.தோனியின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அவரால் சிஎஸ்கேவுக்கு வெற்றிப் பெற்றுத்தர முடியவில்லை. கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய பிறகு, அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு ஏமாற்றமடைந்ததை நீங்கள் அவரது உடல்மொழியின் மூலமே புரிந்து கொள்ளலாம். சிஎஸ்கேவுக்காக போட்டியை வென்று கொடுக்க முடியவில்லை என மிகுந்த ஏமாற்றமடைந்தார்.
அவர் ஏன் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடக் கூடாது? அவர் முழு உடல்தகுதியுடன் இருக்கிறார், நன்றாக ரன்கள் குவிக்கிறார், ஃபோர்கள் மற்றும் சிக்ஸர்கள் அடிக்கிறார். அவரை விளையாடக் கூடாது எனக் கூறுவதற்கு ஒரு காரணமும் இல்லை. அவர் விளையாட வேண்டும் என நினைத்தால் கண்டிப்பாக விளையாடலாம். அவர் தொடர்ந்து விளையாடுவது குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறார் எனத் தெரியவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.