முகப்பு
ஐபிஎல்

இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை சந்திக்கப் போவது யார்? ராஜஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 24 மே, 2024 at 3:56 PM
ஹெய்ன்ரிச் கிளாசன் - படம் | ஐபிஎல்
பகிர்:

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய அபிஷேக் சர்மா 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின், டிராவிஸ் ஹெட் மற்றும் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தனர். ஒருபுறம் டிராவிஸ் ஹெட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடினார். இருப்பினும், ராகுல் திரிபாதி 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். திரிபாதி ஆட்டமிழந்த அதே ஓவரிலேயே வந்த வேகத்தில் மார்கரம் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

Advertisement

இதனையடுத்து, டிராவிஸ் ஹெட் மற்றும் ஹெய்ன்ரிச் கிளாசன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறிது நேரம் தாக்குப் பிடித்தது. டிராவிஸ் ஹெட் 34 ரன்களில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் விழுந்தபோதிலும் ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கிளாசன் அரைசதம் அடித்தார். அவர் 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் டிரண்ட் போல்ட் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments