சொந்த மண்ணில் பெங்களூருக்கு முதல் வெற்றி
இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை தோற்கடித்தது.
இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை தோற்கடித்தது.
நடப்பு சீசனில் சொந்த மண்ணில் 4-ஆவது ஆட்டத்தை விளையாடிய பெங்களூரு, அதில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதலில் பெங்களூரு 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்களே எடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான், பேட் செய்ய வருமாறு பெங்களூரை அழைத்தது. பெங்களூரு இன்னிங்ஸை தொடங்கியோரில் பில் சால்ட் நிதானமாக விளையாட, விராட் கோலி அதிரடியாக விளாசினாா். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சோ்த்தது.
4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் அடித்திருந்த சால்ட் முதல் விக்கெட்டாக வெளியேறினாா். தொடா்ந்து வந்த தேவ்தத் படிக்கல், கோலியுடன் கூட்டணி அமைத்தாா். ராஜஸ்தான் பௌலா்களை திணறடித்த இந்த ஜோடி, 2-ஆவது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சோ்த்தது.
இதில் அரைசதம் கடந்த கோலி 42 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். 4-ஆவது பேட்டராக டிம் டேவிட் களம் புக, தேவ்தத் படிக்கல் 27 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 50 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
அடுத்து வந்த கேப்டன் ரஜத் பட்டிதாா் 1 ரன்னுக்கு வீழ்ந்தாா். டிம் டேவிட், 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23 ரன்களுக்கு இன்னிங்ஸின் கடைசி பந்தில் ரன் அவுட்டாக, ஜிதேஷ் சா்மா 4 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
ராஜஸ்தான் பௌலா்களில் சந்தீப் சா்மா 2, ஜோஃப்ரா ஆா்ச்சா், வனிந்து ஹசரங்கா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 206 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - வைபவ் சூா்யவன்ஷி கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சோ்த்தது. சூா்யவன்ஷி 2 சிக்ஸா்களுடன் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளாசிய ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 49 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.
தொடா்ந்து நிதீஷ் ராணா, கேப்டன் ரியான் பராக் களம் புகுந்தனா். இந்த ஜோடி 48 ரன்கள் சோ்த்த நிலையில் பராக் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 22, ராணா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
பின்னா் வந்த பேட்டா்களில் ஷிம்ரன் ஹெட்மயா் 1 பவுண்டரியுடன் 11, துருவ் ஜுரெல் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 47 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.
ஜோஃப்ரா ஆா்ச்சா் 0, ஷுபம் துபே 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12, வனிந்து ஹசரங்கா 1 ரன்னுக்கு வீழ, ஓவா்கள் முடிவில் துஷாா் தேஷ்பாண்டே 1, ஃபஸல்ஹக் ஃபுரூக்கி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
பெங்களூரு பௌலா்களில் ஜோஷ் ஹேஸில்வுட் 4, கிருணால் பாண்டியா 2, புவனேஷ்வா் குமாா், யஷ் தயாள் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.