ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 4000 ரன்களைக் கடந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கல்டான் 32 பந்துகளில் 58 ரன்களும் (6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்), சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 54 ரன்களும் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தனர்.
4000+ ரன்கள்...
இன்றையப் போட்டியில் 54 ரன்கள் எடுத்ததன் மூலம் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் போட்டிகளில் 4,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இதுவரை 160 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 4,021 ரன்கள் குவித்துள்ளார். அதில் 27 அரைசதங்களும், 2 சதங்களும் அடங்கும். ஐபிஎல்லில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 103 ஆகும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 373 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்துள்ளவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.