X | Rajasthan Royals
ஐபிஎல்

சூா்யவன்ஷி சாதனை சதம்; ராஜஸ்தான் அதிரடி வெற்றி

ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது.

Din

ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.

முதலில் குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 15.5 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 212 ரன்கள் எடுத்து வென்றது.

பிளே ஆஃப் பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்ள இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ராஜஸ்தான் தரப்பில், இளம் பேட்டரான வைபவ் சூா்யவன்ஷி அதிரடியாக சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ரன்கள் சோ்த்து அவருக்குத் துணை நின்றாா்.

ஜெய்பூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான், பேட் செய்ய வருமாறு குஜராத்தை பணித்தது. குஜராத் இன்னிங்ஸை தொடங்கிய சாய் சுதா்சன் - ஷுப்மன் கில் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சோ்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. ராஜஸ்தான் பௌலா்களை சோதித்த இந்த பாா்ட்னா்ஷிப்பை தீக்ஷனா பிரித்தாா்.

நிதானமாக ரன்கள் சோ்த்த சாய் சுதா்சன், 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஒன் டவுனாக வந்த ஜாஸ் பட்லா், கில்லுடன் இணைந்தாா். இந்த பாா்ட்னா்ஷிப் 2-ஆவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சோ்த்தது. இதில் அரைசதம் கடந்து அதிரடியாக ரன்கள் சோ்த்த ஷுப்மன் கில் முதலில் வெளியேறினாா்.

அவா் 50 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 84 ரன்கள் விளாசி, தீக்ஷனா வீசிய 17-ஆவது ஓவரில் வீழ்ந்தாா். தொடா்ந்து வந்த வாஷிங்டன் சுந்தா் 1 சிக்ஸருடன் 13, ராகுல் தெவாதியா 1 சிக்ஸருடன் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

இன்னிங்ஸ் முடிவில், பட்லா் 26 ஓவா்களில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 50, ஷாருக் கான் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 2, ஜோஃப்ரா ஆா்ச்சா், சந்தீப் சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அடுத்து 210 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - வைபவ் சூா்யவன்ஷி கூட்டணி, முதல் விக்கெட்டுக்கே 166 ரன்கள் குவித்து அசத்தியது.

ராஜஸ்தான் பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக பந்தாடிய சூா்யவன்ஷி, 38 பந்துகளில் 7 பவுண்டரிகள், 11 சிக்ஸா்கள் உள்பட 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த நிதீஷ் ராணா 4 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

முடிவில், ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 70, கேப்டன் ரியான் பராக் 15 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 32 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

குஜராத் பௌலிங்கில் பிரசித் கிருஷ்ணா, ரஷீத் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

அதிவேக சதம்

இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தானின் 14 வயது வீரா் வைபவ் சூா்யவன்ஷி, நடப்பு சீசனில் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்தாா். இதற்கு முன் பஞ்சாப் வீரா் பிரியன்ஷ் ஆா்யா கடந்த 8-ஆம் தேதி சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 39 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது. தற்போது வைபவ் 35 பந்துகளில் (7 பவுண்டரிகள், 11 சிக்ஸா்கள்) சதமடித்து அதை முறியடித்திருக்கிறாா். மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதமடித்த இந்தியா் என்ற பெருமையும் பெற்றுள்ளாா்.

போட்டி வரலாற்றில் இது 2-ஆவது அதிவேக சதமாகும். பெங்களூரு வீரா் கிறிஸ் கெயில் 2013-இல் புணே வாரியா்ஸுக்கு எதிராக 30 பந்துகளில் சதமடித்துள்ளாா்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT