ஐபிஎல்-2019

கடைசி 3 ஓவரில் 6 சிக்ஸர்: ரஸல் மிரட்டலில் கொல்கத்தா அதிரடி வெற்றி

DIN


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

12-ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.  

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் விவரம்: https://goo.gl/uL62iL

182 ரன்கள் என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. இந்த சீசனில் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின் மற்றும் நிதிஷ் ராணா களமிறங்கினர். சுனில் நரைன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவில்லை. கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. லின் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அதன்பிறகு, ராணாவுடன் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி துரிதமாக ரன் குவித்து நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்த போதிலும், வெற்றிக்கு தேவையான ரன் ரேட் ஓவருக்கு 11-ஐ கடந்தது. 2-ஆவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த நிலையில் உத்தப்பா 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, களமிறங்கிய கேப்டன் கார்த்திக்கும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். 

எனினும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த ராணா அரைசதம் அடித்தார். இருப்பினும், வெற்றிக்கு தேவையான ரன் ரேட் ஓவருக்கு 12 ரன்களுக்கு மேல் இருந்தது. இதனால், ராணா அதிரடிக்கு மாறினார். ரஸல் அவருக்கு ஸ்டிரைக் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் 16-ஆவது ஓவரில் மைதானத்தின் விளக்குகள் பிரச்னை காரணமாக போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இந்த இடையூறுக்கு பிறகு, போட்டி மீண்டும் தொடங்கியது. ஆனால், போட்டி தொடங்கியவுடன் ரஷித் கான் வீசிய முதல் பந்திலேயே ராணா ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளுக்கு 68 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, மொத்த நெருக்கடியும் ரஸலிடம் சென்றது. கடைசி 4 ஓவருக்கு 59 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. 

17-ஆவது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமாரும் அற்புதமாக வீசி வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால், கடைசி 3 ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 53 ரன்கள் என்ற மிக இக்கட்டான நிலை ஏற்பட்டது. 

ஆட்டத்தின் போக்கை மாற்றிய ரஸல்: 

18-ஆவது ஓவரை சித்தார்த் கௌல் வீசினார். அதன் முதல் இரண்டு பந்தில் ரஸல் சிக்ஸர் அடித்து சித்தார்த் கௌலுக்கு நெருக்கடி அளித்தார். அந்த நெருக்கடியின் காரணமாக அந்த ஓவரின் 5-ஆவது பந்தில் கூடுதலாக ஒரு பவுண்டரியும் கிடைத்தது. இதனால், அந்த ஓவரில் மட்டும் கொல்கத்தா அணிக்கு 19 ரன்கள் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து, 19-ஆவது ஓவரை ஹைதராபாத் கேப்டன் புவனேஷ்வர் குமார் வீசினார். ஆனால், முந்தைய ஓவரில் 19 ரன்கள் குவித்த உத்வேகத்தில் இருந்த ரஸல் இந்த ஓவரையும் பவுண்டரியுடன் தொடங்கினார். 2-ஆவது பந்தில் சிக்ஸர், 3-ஆவது பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி என ரஸல் மிரட்டினார். இதைத்தொடர்ந்து, 5-ஆவது பந்தையும் ரஸல் சிக்ஸருக்கு பறக்கவிட கொல்கத்தா அணியின் வெற்றி நெருங்கியது. புவனேஷ்வர் குமார் வீசிய 19-ஆவது ஓவரில் மட்டும் கொல்கத்தா அணி 21 ரன்கள் எடுத்தது. இதனால், கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. 

கடைசி ஓவரை ஷாகிப் அல் ஹசன் வீசினார். ரஸல் ஸ்டிரைக்கில் இருந்தார். முதல் பந்தை ஷாகிப் வைடாக வீச, 6 பந்துகளுக்கு 12 ரன் என்ற நிலை இருந்தது. அடுத்த பந்தில் ரஸல் ஒரு ரன் எடுத்தார். இதையடுத்து, இளம் வீரரான ஷூப்மன் கில் ஸ்டிரைக்குக்கு வந்தார். அவர் அடுத்த 3 பந்துகளில் அட்டகாசமாக 2 சிக்ஸர் அடித்து கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

இதன்மூலம், 19.4 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஸல் 19 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 49 ரன்களுடனும், கில் 10 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT