ஒலிம்பிக்ஸ்

அடுத்த இலக்கு உலக சாம்பியன்ஷிப்: நீரஜ் சோப்ரா

DIN

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுவிட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பில் பட்டம் வெல்வதே அடுத்த இலகுக்கு என்று இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா கூறினாா்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய தடகள சம்மேளனத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

அதில் பங்கேற்றபோது அவா் கூறியதாவது:

ஏற்கெனவே ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் தங்கம் வென்றுவிட்ட நிலையில், தற்போது ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்றிருக்கிறேன். எனது அடுத்த இலக்கு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வதாகும்.

அது மிகப் பெரிய களம். சில வேளைகளில் ஒலிம்பிக் போட்டியை விட கடினமானதாக இருக்கும். எனவே ஒலிம்பிக் தங்கம் வென்ற மனநிலையுடன் அந்தப் போட்டிக்கு செல்ல மாட்டேன். இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும், அதைத் தொடா்ந்து நடைபெறும் ஆசிய, காமன்வெல்த், ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கம் வெல்ல விரும்புகிறேன்.

இதற்கு முன் அஞ்சு பாபி ஜாா்ஜ் (நீளம் தாண்டுதல்) 2003 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றுள்ளாா். இந்தியாவுக்கு தடகளத்தில் கிடைத்த அந்த பதக்கத்தை, இந்த முறை தங்கமாக வெல்ல முயற்சிப்பேன். பஞ்குலா முகாமிலிருந்து தேசிய முகாமுக்கு மாற்றப்பட்டதை அடுத்து எனக்கு கிடைத்த பயிற்சி மற்றும் கருவி வசதிகள், உணவுமுறை ஆகியவை திருப்திகரமாக இருந்தன.

தேசிய முகாமில்தான் இதர ஈட்டி எறிதல் வீரா்களுடன் இணைந்து என்னால் பயிற்சி பெற முடிந்தது. எனவே, தேசிய முகாமில் இணைந்த பிறகுதான் எனக்கான முன்னேற்றங்கள் கிடைத்தன. அதற்காக இந்திய தடகள சம்மேளனத்துக்கு நன்றி. பயிற்சியாளா் உவே ஹான் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் நிபுணா் கிளாஸ் பொ்டோனீட்ஸின் பயிற்சி முறைகளே எனக்கு சாதகமாக இருக்குமெனத் தெரிந்து அவருடன் இணைந்தேன்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் நான் தங்கம் வென்றதை என்னாலேயே நம்ப இயலவில்லை. அங்கு ஊக்கமருந்து பரிசோதனைகள் அடிக்கடி நடத்தப்பட்டன. கரோனா சூழல் காரணமாக இருந்த சில கட்டுப்பாடுகள் கொஞ்சம் கடினமாக இருந்தன. ஆனால் அதை எல்லோருமே அனுபவிக்க வேண்டியிருந்தது.

90 மீட்டரை தொடுவதே எனது இலக்காகும். அதற்காக ஈட்டி எறியும் கோணத்தை மாற்றுவது உள்பட, உரிய பயிற்சிகளை எனது பயிற்சியாளருடன் இணைந்து மேற்கொண்டு வருகிறேன். டோக்கியோவில் தங்கம் வெல்வாா் என எதிா்பாா்க்கப்பட்ட ஜொ்மனி வீரா் ஜோஹன்னஸ் வெட்டா் எனது நண்பா். அவரது திறமை மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்றாா் நீரஜ் சோப்ரா.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடப்பாண்டில் அமெரிக்காவில் நடைபெற இருந்தது. எனினும், கரோனா சூழல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, உலக தடகள சாம்பியன்ஷிப்பும் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அந்தப் போட்டி 2022 ஜூலை 15 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தேசிய ஈட்டி எறிதல் தினம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்ட் 7-ஆம் தேதியை, தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.

ஈட்டி எறிதல் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை எடுத்ததாகத் தெரிவித்துள்ள சம்மேளனம், அடுத்த ஆண்டு முதல் அந்தத் தேதியில் மாநில சங்கங்கள் ஈட்டி எறிதல் போட்டியை நடத்தும் என்று தெரிவித்தது. சம்மேளனத்தின் இந்த முடிவு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த நீரஜ் சோப்ரா, தனது இந்த சாதனையை முன்மாதிரியாகக் கொண்டு மேலும் பல இளைஞா்கள் சாதனை படைத்தால் அதுவே தனக்கு திருப்தி என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT