நோவா லைலஸ்  
ஒலிம்பிக்ஸ்

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: தடைகளைத் தகர்த்து தங்கம் வென்ற தடகள வீரர்!

தடைகளைத் தகர்த்து தங்கம் வென்ற தடகள வீரர்..யார் இந்த நோவா லைலஸ்..?

DIN

பாரீஸ் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த நோவா லைலஸ் முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

ஒலிம்பிக் தொடரில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் போட்டிகளில் 100 மீட்டர் தடகளமும் ஒன்று. இன்று (ஆக.5) அதிகாலை நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் நடப்புச் சாம்பியனான இத்தாலியைச் சேர்ந்த மார்சல், ஜமைக்கா வீரர் தாம்சன், அமெரிக்காவைச் சேர்ந்த நடப்பு 100 மீட்டர் உலக சாம்பியன் நோவா லைல்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.

ஜமைக்காவின் கிஷான் தாம்சனை ஃபோட்டோ ஃபினிஷில் தோற்கடித்த நோவா லைல்ஸ், ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார். நோவா லைல்ஸ் பந்தையத்தில் மில்லி வினாடிகளில் பதக்கத்தை தனதாக்கினார்.

நோவா லைல்ஸ் 9.784 வினாடிகளிலும், தாம்சன் 9.789 வினாடிகளிலும் இலக்கை கடந்தனர். ஆரம்பத்தில் சற்று பின்தங்கிய நிலையில் ஓடிய அவர், கடைசி 10 மீட்டர் தொலைவை மின்னல் வேகத்தில் கடந்து முதலிடம் பிடித்தார்.

வெற்றிக்குப் பின்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நோவா லைலஸ் வெளியிட்டுள்ளப் பதிவில், தான் ஆஸ்துமா, ஒவ்வாமை, டிஸ்லெக்ஸியா, கவனக் குறைவால் மிகை செயல்பாடு கோளாறு (ADHD), பதட்டம், மனச்சோர்வு போன்ற பல பிரச்னைகள் தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ”இதுபோன்ற நோய்களைக் கடந்து தம்மால் சாதிக்க முடிந்தது போல மற்றவர்களாலும் சாதிக்க முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

1997 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று பிறந்த நோவா லைல்ஸ் அலெக்ஸாண்ட்ரியா, வெர்ஜீனியா, வாஷிங்டன் டிசியின் புறநகர்ப் பகுதியில் வளர்ந்தார். அவருடைய பெற்றோர்களான கெவின் லைல்ஸ், கெய்ஷா கெய்ன் இருவரும் செட்டான் ஹால் பல்கலைக்கழகத்தில் தடகள விளையாட்டு வீரர்களாக இருந்தனர். அவரது இளைய சகோதரர் ஜோசபஸ் லைல்ஸ் ஒரு சிறந்த ஓட்டப்பந்தய வீரர் ஆவார்.

நோவா லைல்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் உள்பட பல்வேறு விளையாட்டுகளை விளையாடினார். 12 வயதில், அவர் டிராக் அண்ட் ஃபீல்டில் ஈடுபட்டார். விரைவில் அவர் ஒரு சிறந்த ஸ்ப்ரிண்டர் ஆனார். 2014ஆம் ஆண்டு சீனாவின் நான்ஜிங்கில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார். அதே ஆண்டு அவர் 20 வயதுக்குள்பட்டோருக்கான சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர், 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கங்களை வென்றார்.

மின்னல் வேக மனிதரான உசைன் போல்டின் உலகச் சாதனையை கால் வினாடியில் தவறவிட்ட நோவா லைல்ஸ், சிறு வயது முதலே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். நோவா லைல்ஸுக்கு 5 வயது இருக்கும்போது அவருக்கு ஆஸ்துமா இருப்பது கண்டறியப்பட்டது.

27 வயதான லைல்ஸ் இந்த வெற்றியின் மூலம் தனது முதல் ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தைப் பெற்றார். ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக்கில் தனது இரண்டாவது பதக்கத்தைப் வென்றுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அவரின் பதக்க வேட்டை இன்னும் முடிவடையவில்லை. ஏனெனில் அவருக்குப் பிடித்த 200 மீட்டர், 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் அவர் அதிகப் பதக்கங்களை வெல்ல அவருக்கு வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்

1. நோவா லைல்ஸ் (9.784 வினாடிகள்)

2. கிஷன் தாம்சன் (9.789 வினாடிகள்)

3. பிரெட் கெர்லி (9.81 வினாடிகள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் 4-ஆவது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளோம்: தலைமைத் தளபதி வாழ்த்து!

மேற்கு வங்கத்தில் எம்.பி. மீது தாக்குதல்: என்.ஐ.ஏ. விசாரணை கோரும் பாஜக!

ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: பலி 18-ஆக உயர்வு!

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசம் போராடி தோல்வி!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT