"ரியோ ஒலிம்பிக்கில் எனது உடல் ஆற்றலைக் கொண்டு அல்ல; சாமர்த்தியத்தால் வென்றேன்' என்று மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறினார்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் சாக்ஷியை கெளரவிக்கும் நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சாக்ஷி கூறியதாவது:
எனது ஆற்றலே எனது பலம் என்று பயிற்சியாளர் கூறினார். ஆனால், சாமர்த்தியமாக விளையாடிய முறையினாலேயே நான் வென்றதாக கருதுகிறேன்.
இந்தியர்கள் வழக்கமாக தங்களது பலத்தைக் கொண்டே வெற்றி பெறுவார்கள். இதர நாட்டு வீரர்கள் முதல் 3 நிமிடங்களுக்கு ஆக்ரோஷமாக விளையாடுகையில், இந்தியர்கள் 6 நிமிடங்கள் வரையில் சிறப்பாகச் செயல்படுவர்.
ரியோ ஒலிம்பிக்கில் எனது அனுபவம் பதற்றமானதாக இருந்தது. அங்கு 15 நாள்கள் இருந்தோம். தினமும் எனது எடையை குறைக்க வேண்டியிருந்தது. போட்டியை ஒட்டுமொத்த இந்தியாவும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கையில் என்ன நிகழும் என்று தெரியவில்லை.
என்னுடன் மோதிய ரஷிய வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை 100 சதவீதம் நம்பினேன். அதேபோல், எது நடந்தாலும் நான் ஒரு பதக்கம் வெல்வேன் என்பதை அறிந்திருந்தேன்.
வெற்றிக்குப் பிறகு தற்போது கிராமம், வர்த்தக வளாகம் என செல்லும் இடங்களில் அனைவரும் பாராட்டும் தருணம் மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையைக் கூறுவதென்றால், நான் வெற்றி பெற்ற தருணத்தின் முக்கியத்துவத்தை உணர எனக்கு நீண்ட நேரம் பிடித்தது.
போட்டிக்குப் பிறகு நாடு திரும்பியபோது தில்லி விமான நிலையத்தில் கிடைத்த வரவேற்பை கண்ட பிறகே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். ஒலிம்பிக் போட்டிக்காக பல்வேறு முறைகளில் பயிற்சி மேற்கொண்டேன்.
எனது குடும்பத்தினர் எந்தவொரு கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை. ஆனால், நான் உணவுக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் 4-5 கிலோ எடையை குறைக்க வேண்டியிருந்தது.
அனைத்துக்கும் மேலாக, இப்போது எனது எண்ணத்தில் இருப்பதெல்லாம் ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்வது தான். சுஷீல் குமார், யோகேஷ்வர் தத் போன்றவர்களைக் காணும்போது ஊக்கம் பிறக்கிறது.
நான் மல்யுத்தப் போட்டியில் களமிறங்கத் தொடங்கியபோது மொத்தமே 4-5 வீராங்கனைகள் தான் இருந்தோம். ஆனால், தில்லி காமன்வெல்த், ஆசியப் போட்டிகள் ஆகியவற்றில் அதிக வீராங்கனைகள் பதக்கம் வென்றதை அடுத்து தற்போது பயிற்சி செய்ய இடம் கிடைக்காத அளவிற்கு வீராங்கனைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று சாக்ஷி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.