டிவில்லியர்ஸ் அதிரடி வீண்: பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8-ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை தோற்கடித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8-ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை தோற்கடித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
பெங்களூர் வீரர் டிவில்லியர்ஸ் 46 பந்துகளில் 9 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் குவித்தபோதும் அந்த அணியால் வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூர் அணியில் கேப்டன் வாட்சன் 1 ரன்னில் நடையைக் கட்ட, டிவில்லியர்ஸ் களம்புகுந்தார். அவர், வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். இதனிடையே மற்றொரு தொடக்க வீரரான விஷ்ணு வினோத் 7 ரன்களிலும், கேதார் ஜாதவ் 1 ரன்னிலும் நடையைக் கட்ட, மன்தீப் சிங் களம்புகுந்தார். விரைவாக விக்கெட்டுகள் விழுந்ததால் டிவில்லியர்ஸýம் வேகத்தைக் குறைத்துக் கொண்டார். இதனால் முதல் 10 ஓவர்களில் 53 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூர்.
அந்த அணி 13.1 ஓவர்களில் 68 ரன்களை எட்டியபோது மன்தீப் சிங்கின் விக்கெட்டை இழந்தது. அவர் 34 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ஸ்டூவர்ட் பின்னி களமிறங்க, 15 ஓவர்களில் 71 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது பெங்களூர்.
வருண் ஆரோன் வீசிய 16-ஆவது ஓவரில் சிக்ஸரை விரட்டி அதிரடியில் இறங்கிய டிவில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டானிஸ் வீசிய அடுத்த ஓவரில் இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் அவர் 34 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். தொடர்ந்து வேகம் காட்டிய டிவில்லியர்ஸ், மோஹித் சர்மா ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி, சந்தீப் சர்மா ஓவரில் இரு சிக்ஸர் ஒரு பவுண்டரியை விரட்ட, 19 ஓவர்களில் 134 ரன்களை எட்டியது பெங்களூர்.
மோஹித் சர்மா வீசிய கடைசி ஓவரில் டிவில்லியர்ஸ் இரு சிக்ஸர்களை பறக்கவிட, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது பெங்களூர். டிவில்லியர்ஸ் 46 பந்துகளில் 89, ஸ்டூவர்ட் பின்னி 20 பந்துகளில் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் 15 ஓவர்களில் 71 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பெங்களூர் அணி, டிவில்லியர்ஸின் அதிரடியால் கடைசி 5 ஓவர்களில் 77 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் வருண் ஆரோன் 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். அக்ஷர் படேல் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.
பஞ்சாப் வெற்றி: பின்னர் ஆடிய பஞ்சாப் அணியில் மனன் வோரா-ஹஷிம் ஆம்லா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6 ஓவர்களில் 62 ரன்கள் சேர்க்க, அந்த அணியின் வெற்றி எளிதானது. மனன் வோரா 21 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த அக்ஷர் படேல் 9 ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து ஹஷிம் ஆம்லாவுடன் இணைந்தார் கேப்டன் மேக்ஸ்வெல். இந்த ஜோடி அதிரடியாக ரன் சேர்க்க, 11 ஓவர்களில் 107 ரன்களை எட்டியது பஞ்சாப். இதன்பிறகு வாட்சன் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி, 32 பந்துகளில் அரை சதம் கண்டார் ஆம்லா.
மறுமுனையில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய மேக்ஸ்வெல், சாஹல் பந்துவீச்சில் சிக்ஸரை விரட்டி, ஆட்டத்தை வெற்றியில் முடித்தார். இதனால் பஞ்சாப் அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஆம்லா 38 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 58, மேக்ஸ்வெல் 22 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூர் தரப்பில் டைமல் மில்ஸ், யுவேந்திர சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அக்ஷர் படேல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
பஞ்சாப் அணி, தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. அதேநேரத்தில் பெங்களூர் அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.