மும்பைக்கு 2-ஆவது வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியைத் தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.
செய்திகள்மும்பைக்கு 2-ஆவது வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியைத் தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியைத் தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் ஹைதராபாத் அணி 3 ஆட்டங்களில் விளையாடி முதல் தோல்வியைப் பதிவு செய்துள்ளது.
மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த ஹைதராபாத் அணியில் ஷிகர் தவனும், கேப்டன் டேவிட் வார்னரும் ஆரம்பத்தில் ரன் சேர்க்க தடுமாறினர். இதனால் முதல் 5 ஓவர்களில் அந்த அணி 26 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மெக்லீனாகான் வீசிய 7-ஆவது ஓவரில் தவன் இரு பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாச, ஆட்டம் சூடுபிடித்தது. இதன்பிறகு அதிரடியில் இறங்கிய வார்னர், ஹார்திக் பாண்டியா ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசினார். தொடர்ந்து வேகம் காட்டிய வார்னர், ஹர்பஜன் சிங் வீசிய 11-ஆவது ஓவரில் மேலும் ஒரு சிக்ஸரை தூக்கினார்.
அடுத்த பந்தில் வார்னர் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றார். ஆனால் அவருடைய கணிப்பு தப்பவே, பந்து மேல் நோக்கி பறந்தது. அதை விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் அற்புதமாகப் பிடிக்க, வார்னர் 34 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.2 ஓவர்களில் 81 ரன்கள் சேர்த்தது.
பின்னர் வந்த தீபக் ஹூடா 9 ரன்களில் நடையைக் கட்ட, ஷிகர் தவன் 43 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் சேர்த்து மெக்லீனாகான் பந்துவீச்சில் போல்டு ஆனார். பின்னர் வந்த யுவராஜ் சிங் 7 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பாண்டியா பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
இதன்பிறகு வந்தவர்களில் பென் கட்டிங் 10 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்தார். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது ஹைதராபாத்.
மும்பை தரப்பில் ஜஸ்பிரித் பூம்ரா 4 ஓவர்களில் 24 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 4 ஓவர்களில் 23 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பார்த்திவ் 39: பின்னர் ஆடிய மும்பை அணியில் பார்த்திவ் படேல்-ஜோஸ் பட்லர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.1 ஓவர்களில் 28 ரன்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் 14 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த கேப்டன் ரோஹித் சர்மா 4 ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து வந்த நிதிஷ் ராணா, முஸ்தாபிஜுர் ரஹ்மான் பந்துவீச்சில் சிக்ஸரை விரட்டினார். அதே ஓவரில் பார்த்திவ் படேல் ஹாட்ரிக் பவுண்டரிகளை பறக்கவிட, 6 ஓவர்களில் 61 ரன்களை எட்டியது மும்பை.
தொடர்ந்து வேகம் காட்டிய பார்த்திவ் படேல் 24 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்து ஹூடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கிரண் போலார்ட் 11 ரன்களில் வெளியேற, கிருனால் பாண்டியா களம்புகுந்தார்.
ராணா 45: ரஷித் கான் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி அதிரடியில் இறங்கிய பாண்டியா, நெஹ்ரா வீசிய அடுத்த ஓவரில் மேலும் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டினார். தொடர்ந்து வேகம் காட்டிய அவர், பென் கட்டிங் ஓவரில் மேலும் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை பறக்கவிட்ட கையோடு, புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 20 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார்.
அதே ஓவரில் ராணாவும் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 36 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஹார்திக் பாண்டியா 2, ஹர்பஜன் சிங் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஹைதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 21 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஜஸ்பிரித் பூம்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
எனது வாழ்வின் சிறப்புமிக்க நாள்
நான் சதமடித்திருக்கும் இந்த நாள் எனது வாழ்வின் சிறப்புமிக்க தினங்களில் ஒன்றாகும் என்று டெல்லி வீரர் சஞ்ஜு சாம்சன் தெரிவித்தார்.
புணேவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-ஆவது லீக் ஆட்டத்தில் 97 ரன்கள் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ்.
இதில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் சாம்சன் 63 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடிய புணே அணி 16.1 ஓவர்களில் 108 ரன்களுக்கு சுருண்டது.
இதில் ஆட்டநாயகன் விருதை வென்ற சாம்சன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த நாள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. எனது வாழ்வின் சிறப்பான தினங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவில் இருக்கும் அனைத்து வீரர்களுக்குமே உலகின் தலைசிறந்த அணியான இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கும். இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இப்போது சதமடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நான் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்றார்.
இன்றைய ஆட்டம்
கொல்கத்தா-பஞ்சாப்
இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்