செய்திகள்

ஹைதராபாத் 191 ரன்கள் குவிப்பு: வில்லியம்சன் 89, தவன் 70

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் கேன் வில்லியம்சன் 51 பந்துகளில் 89 ரன்களும், ஷிகர் தவன் 50 பந்துகளில் 70 ரன்களும் குவித்தனர்.
ஹைதராபாதில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணியில் கேப்டன் டேவிட் வார்னர் 4 ரன்கள் எடுத்த நிலையில் மோரீஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஷிகர் தவனுடன் இணைந்தார் கேன் வில்லியம்சன். ஆரம்பத்தில் இந்த ஜோடி நிதானம் காட்ட, முதல் 5 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதராபாத்.
மேத்யூஸ் வீசிய 7-ஆவது ஓவரில் வில்லியம்சன் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்களை விளாச, அதிரடி ஆரம்பமானது. மறுமுனையில் தவனும் வேகம் காட்ட, 10 ஓவர்களில் 80 ரன்களை எட்டியது ஹைதராபாத்.
கம்மின்ஸ் வீசிய 11-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசிய வில்லியம்சன், அமித் மிஸ்ரா வீசிய அடுத்த ஓவரில் இரண்டு ரன்களை எடுத்தபோது அரை சதத்தை (33 பந்துகளில்) எட்டினார். தொடர்ந்து வேகம் காட்டிய வில்லியம்சன், மிஸ்ரா வீசிய 14-ஆவது ஓவரில் மேலும் இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
தவன் அரை சதம்: இதனிடையே மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷிகர் தவன் 40 பந்துகளில் அரை சதம் கண்டார். ஹைதராபாத் அணி 16.1 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்திருந்தபோது கேன் வில்லியம்சனின் விக்கெட்டை இழந்தது. அவர் 51 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் குவித்த நிலையில் மோரீஸ் பந்துவீச்சில் ஷ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் ஆனார். வில்லியம்சன்-தவன் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 136 ரன்கள் குவித்தது.
இதையடுத்து யுவராஜ் சிங் களமிறங்க, மறுமுனையில் நின்ற தவன், மோரீஸ் பந்துவீச்சில் இரு பவுண்டரிகளையும், மேத்யூஸ் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டார். தொடர்ந்து அதிரடியாக ரன் சேர்த்த தவன், மோரீஸ் வீசிய 19-ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து மேத்யூஸ் கையில் தஞ்சம்புகுந்தது. 50 பந்துகளைச் சந்தித்த தவன் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்தார்.
அடுத்த பந்தில் யுவராஜ் சிங் (3 ரன்களில்) ஸ்டெம்பை பறிகொடுத்தார். இதனால் மோரீஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் பின்னர் வந்த தீபக் ஹூடா, மோரீஸின் ஹாட்ரிக் முயற்சியை தகர்த்தார்.
ஜாகீர்கான் வீசிய கடைசி ஓவரில் தீபக் ஹூடா ஒரு சிக்ஸரை விளாச, ஹென்ரிக்ஸ் தன் பங்குக்கு இரு பவுண்டரிகளை விரட்டினார். அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் கிடைத்தன. இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. ஹென்ரிக்ஸ் 12, ஹூடா 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
டெல்லி தரப்பில் கிறிஸ் மோரீஸ் 4 ஓவர்களில் 26 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT