செய்திகள்

டெஸ்ட்: வார்னரின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியை நெருங்கும் ஆஸ்திரேலிய அணி!

எழில்

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 265 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த அணி மூன்றாம் நாளின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 78.5 ஓவர்களில் 260 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல்ஹசன் 84 ரன்களும், தமிம் இக்பால் 71 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியத் தரப்பில் பட் கம்மின்ஸ், நாதன் லயன், ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 74.5 ஓவர்களில் 217 ரன்களுக்கு சுருண்டது. இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலை பெற்றது. வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 25.5 ஓவர்களில் 68 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 16-ஆவது முறையாகும். மெஹைதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 22 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. தமிம் இக்பால் 30 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தார்கள். முன்னதாக செளம்ய சர்க்கார் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒட்டுமொத்தமாக 88 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது வங்கதேசம்.

இந்நிலையில், வங்கதேச அணி தனது 2-வது இன்னிங்ஸில் 79.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தமிம் இக்பால் அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். லயன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக உள்ளதால் இந்த இலக்கை அடைய ஆஸ்திரேலிய மிகவும் சிரமப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

வழக்கமாக டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடியாக விளையாடும் வார்னர் இந்தப் போட்டியிலும் தனது அதிரடியைத் தொடர்ந்தார். வங்கதேசப் பந்துவீச்சாளர்களால் ரென்ஷா, கவாஜா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் வார்னரின் ஆட்டத்தால் சூழல் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாகத் திரும்பியது. 8 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 64 பந்துகளில் அரை சதம் எடுத்தார் வார்னர். 25.6 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை எட்டியது. 

3-ம் நாளின் முடிவில் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. வார்னர் 75, ஸ்மித் 25 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற இன்னும் 156 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்ட் போட்டியை வெல்லும் நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT