செய்திகள்

கோலிக்கு அடுத்ததாக ரோஹித் சர்மாவும் சதம்! இந்தியா தொடர்ந்து ரன்கள் குவிப்பு!

எழில்

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடிவருகிறது. கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சதமெடுத்துள்ளார்கள்.  

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, மிகுந்த உற்சாகத்தோடு 4-வது ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில் இலங்கை அணி தொடர் தோல்விகளால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால், இதுவரை விளையாடாதவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாக்குர் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். மேலும் குல்தீப் யாதவ், மனீஷ் பாண்டே ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சஹால், ஜாதவ், புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான தோனி விளையாடும் 300-வது போட்டி இது. இதற்காக இந்திய கேப்டன் கோலி, தோனிக்கு ஒரு நினைவுப்பரிசை வழங்கினார்.

பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தில் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார் தவன். முதல் 3 ஓவர்கள் வரை 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்த இந்திய அணி அதன்பிறகு தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கோலியும் ரோஹித் சர்மாவும் மாறி மாறி பவுண்டரிகள் எடுத்தார்கள். நான்காவது ஓவரில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகள் அடித்து அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார் கோலி. 8.4 ஓவர்களில் சிக்ஸ் அடித்து இந்திய அணி 50 ரன்கள் எட்ட உதவினார் கோலி. பிறகு 38 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் கோலி. ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்துள்ள 45-வது ஒருநாள் அரை சதமாகும். இதற்கு முன்பு 11-வது ஓவரில் கோலி அரை சதம் எடுத்ததில்லை. 2012-ல் மிர்புரில் பாகிஸ்தானுக்கு எதிராக 16-வது ஓவரில் அரை சதம் எடுத்ததே ஓவர் அடிப்படையில் அவருடைய வேகமான அரை சதமாகும். 

13-வது ஓவரின் முடிவில் தொடர் பவுண்டரி, சிக்ஸர்களால் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.

கோலிக்கு இணையாக வேகமாக ரன்கள் குவித்து வந்த ரோஹித் சர்மா, 45 பந்துகளில் அரை சதம் எடுத்தார். இதன்பிறகு தொடர் அதிரடியால் இந்திய அணி 20.2 ஒவர்களிலேயே 150 ரன்களைப் பூர்த்தி செய்தது. பிறகு இருவரும் ஒன்று சேர்ந்து 150 ரன்களைத் தாண்டினார்கள். 

ஆரம்பம் முதல் அசத்தலாக விளையாடி வந்த கோலி, 76 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய 29-வது சதமாகும். ஒருநாள் போட்டிகளில் அவரை விடவும் சச்சின் (49), பாண்டிங் (29) மட்டுமே அதிக சதங்களை எடுத்துள்ளார்கள்.

25-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 187 ரன்கள் குவித்தது. 25.5 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. 

ஆட்டத்தின் பாதியிலேயே கோலி சதமெடுத்ததால் அவர் நிச்சயம் இரட்டைச் சதமெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோலி 131 ரன்களில் மலிங்காவின் பந்துவீச்சில் வீழ்ந்தார். இது மலிங்காவின் 300-வது ஒருநாள் விக்கெட்டாகும்.

கோலி விக்கெட்டுக்குப் பிறகு மேலும் வேகமாக ரன்கள் குவிக்க பாண்டியா களமிறக்கப்பட்டார். 32.4 ஓவர்களில் இந்திய அணி 250 ரன்களை எட்டியது. இதன் பின்னர் ரோஹித் சர்மா 85 பந்துகளில் சதமெடுத்தார். இது அவருடைய 13-வது சதமாகும். இலங்கைக்கு எதிராக 4-வது சதத்தை எடுத்துள்ளார்.

இதன்பின்னர் 19 ரன்களில் மேத்யூஸ் பந்துவீச்சில் பாண்டியா வீழ்ந்தார். அடுத்தப் பந்திலேயே ரோஹித் சர்மா 104 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  இதனால் இந்திய அணி 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT