முகப்பு
செய்திகள்

3-வது டெஸ்ட்: நிதானமாக விளையாடும் இலங்கை அணி! சதத்தை நெருங்கும் மேத்யூஸ்!

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இலங்கை இன்னும் 344 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில்...

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:03 AM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் நிதானமாக ரன்கள் சேர்த்து வருகிறார்கள். மேத்யூஸ் 90 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

தில்லியில் இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது.  127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை இந்திய அணி டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 44.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. மேத்யூஸ் 57, கேப்டன் சண்டிமல் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்றைய நாளின் முதல் பகுதியில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளாவது எடுத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை மேத்யூஸும் சண்டிமலும் அருமையாக எதிர்கொண்டார்கள். நிதானமாக ரன் சேர்த்தாலும் கோலியின் அனைத்துத் திட்டங்களையும் முறியடித்தார்கள். இரண்டு மணி நேரம் விளையாடி 61 ரன்கள் மட்டும் எடுத்தாலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். இதனால் முதல் பகுதி இந்திய அணிக்கு ஏமாற்றமாக அமைந்தது. சண்டிமல் 7 பவுண்டரிகளுடன் 145 பந்துகளில் அரை சதமெடுத்தார்.

3-வது டெஸ்டின் மூன்றாம் நாளில் உணவு இடைவேளையின்போது இலங்கை அணி 71 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 90, சண்டிமல் 52 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இலங்கை இன்னும் 344 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அணியின் வசம் 7 விக்கெட்டுகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.