மோசமான காற்றுத் தரம் காரணமாக இலங்கை வீரர் லக்மலுக்கு மீண்டும் உடல் நலக் குறைவு: மைதானத்தை விட்டு வெளியேறினார்!
நான்காவது நாளான இன்றும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
தில்லியில் நடைபெற்று வரும் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 371 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்துவருகிறது.
இந்நிலையில், இந்த டெஸ்டில் மீண்டுமொரு சர்ச்சை உருவாகிற நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது மைதானப் பகுதியில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக புகார் தெரிவித்த இலங்கை அணியினர், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்தினர். இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது மைதானப் பகுதியில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக புகார் தெரிவித்த இலங்கை அணியினர், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்தினர். 126-ஆவது ஓவரை வீசிய சுரங்கா லக்மல், 5 பந்துகளை வீசிவிட்டு களத்திலிருந்து வெளியேறினார். இதையடுத்து மேத்யூஸ், கேப்டன் சண்டிமல், நடுவர்கள், இலங்கை அணி மேலாளர் அசன்கா குருசின்ஹா, இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் ஒன்று கூடி கலந்தாலோசித்தனர். பின்னர் அந்த ஓவரை தில்ருவன் பெரேரா முடித்து வைத்தார். எனினும், அடுத்த ஓவர் வீசும்போதே இலங்கை அணியில் 10 வீரர்கள் மட்டுமே களத்தில் இருப்பதாகக் கூறி ஆட்டத்தை நிறுத்தினார் சண்டிமல். இதையடுத்து இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக கோலி அறிவித்தார். முன்னதாக, மோசமான காற்றுத் தரம் காரணமாக இலங்கை வீரர் லாஹிரு கமகே மூச்சுவிட சிரமப்பட்டதும், மைதானத்தில் வெளிச்சம் குறைந்து காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
நான்காவது நாளான இன்றும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 5-வது ஓவரை லக்மல் வீசிய பிறகு அவரால் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. மைதானத்திலேயே அவர் வாந்தி எடுத்தார். இதையடுத்து அவர் மைதானத்திலிருந்து வெளியேறி வீரர்களின் ஓய்வறைக்குச் சென்றார். இலங்கை வீரர்கள் பலரும் முகக்கவசம் அணிந்துகொண்டுதான் தற்போது விளையாடிவருகிறார்கள். பிறகு 10-வது ஓவரின்போது மீண்டும் களமிறங்கிய லக்மல், உடனடியாக தனது பந்துவீச்சைத் தொடர்ந்தார். எனினும் காற்றின் தரம் இன்றும் மோசமாக உள்ளதால் 2-வது நாள் போல இலங்கை வீரர்கள் பலருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் இந்திய அணியும் ஐசிசியும் அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?