செய்திகள்

இரட்டை சதம் அடித்து ரோஹித் சர்மா அசத்தல்: இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி

DIN

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
கேப்டன் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் இரு அணிகளுக்கு இடையே புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தீர்மானித்தது இலங்கை அணி.
ரோஹித் சர்மா தலைமையில் களம் இறங்கிய இந்தியா 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 392 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய இலங்கை, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
முன்னதாக, தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித்தும், தவனும் களம் இறங்கினர். தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில், "டக்' அவுட் ஆன தவன், இந்த ஆட்டத்தில் நிதானம் காட்டினார். ஒரு புறம் அவர் அடித்து ஆடி அரை சதம் கடக்க மறுமுனையில் ரோஹித் தோள் கொடுத்தார். இந்த கூட்டணியைப் பிரிக்க வேண்டும் என்ற இலங்கை பந்துவீச்சாளர்களின் முயற்சி, அணியின் ஸ்கோர் 115 எட்டியிருந்தபோது பலித்தது. பதிரனா வீசிய பந்தில் திரிமானியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் தவன்.
அடுத்த களம் கண்ட ஸ்ரேயஸ் ஐயர், தர்மசாலாவில் தடுமாறியது போல் அல்லாமல், மிகவும் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை ரோஹித்துடன் இணைந்து உயர்த்தினார்.
முதல் அரை சதம்: இந்தக் கூட்டணியைப் பிரிக்க எவ்வளவோ முயற்சி செய்து ஒரு கட்டத்தில் இலங்கை பந்துவீச்சாளர்கள் சோர்வடைந்துவிட்டனர் என்றே சொல்லலாம். ரோஹித் சதத்தை கடந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்க, ஒரு நாள் போட்டியில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார் ஸ்ரேயஸ். இரு வீரர்களும் இணைந்து மொத்தம் 213 ரன்கள் குவித்தனர். இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொழும்பில் நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத்தில் கோலி-ரோஹித் கூட்டணி 219 ரன்கள் குவித்திருந்தது.
இதன்மூலம், நீண்ட நேரம் களத்தில் நின்ற ஜோடி என்ற பட்டியலில் இவர்களும் இடம்பெற்றனர்.
இந்தியா 45.3-ஆவது ஓவரில் 328 ரன்கள் எடுத்திருந்தபோது பெரேரா வீசிய பந்தில் டி சில்வாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் ஸ்ரேயஸ்.
இதையடுத்து, களம் இறங்கிய தோனி 7 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 2.3 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், ரோஹித்துடன் களம் கண்டார் பாண்டியா. 
கடைசி ஓவரில் தனது 3-ஆவது இரட்டை சதத்தை ரோஹித் பதிவு செய்ய, அந்த ஓவரின் கடைசி பந்தில் திரிமானியிடம் கேட்ச் ஆனார் பாண்டியா. இவ்வாறாக அணி மொத்தம் 392 ரன்கள் குவித்தது.
இலங்கை 251/8: இதையடுத்து, களம் இறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் உபுல் தரங்கா (7 ரன்), குணதிலகா (16 ரன்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 3-ஆவது விக்கெட்டாக களம் கண்ட திரிமானி, வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மாத்யூஸ் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அணியின் ஸ்கோர் 115-ஆக இருந்தபோது டிக்வெல்லா, சாஹல் பந்துவீச்சில் வாஷிங்டனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
குணரத்னே (34 ரன்), கேப்டன் பெரேரா (5 ரன்), பதிரனா (2 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அணி 207 ரன்கள் எடுத்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது பும்ரா பந்துவீச்சில் அகிலா தனஞ்ஜெயா ஆட்டமிழந்தார். மாத்யூஸ் சதம் காண அவருடன் லக்மல் களத்தில் இருந்தார். 50 ஓவர் முடிவில் அந்த அணி 251 ரன்களை எடுத்திருந்தது. அதிகபட்சமாக சாஹல் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகிக்கிறது.
கடைசி ஒரு நாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. அந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும்.


மனைவிக்கு திருமண நாள் பரிசு !

ரோஹித் சர்மா-ரித்திகா சஜ்டே கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இந்த வருடம் 2-ஆவது திருமண நாள். இந்த நாளில் மகிழ்ச்சியுடன் களம் இறங்கிய ரோஹித், இரட்டை சதத்தைப் பதிவு செய்து தனது மனைவிக்கு பரிசாக அளித்தார். முன்னதாக, அவர் 200 ரன்களை நெருங்குவதற்குள் ரித்திகா பதற்றமானார். எனினும், ரோஹித் இலக்கை அடைந்தவுடன் அவர் ஆனந்த கண்ணீர் சிந்தினார். இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

மிகச் சிறந்த நாள்: ரோஹித் மகிழ்ச்சி

இரட்டை சதம் அடித்ததுடன், இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் இந்த நாளை மிகச் சிறந்த நாளாக கருதுகிறேன் என்று ஆட்ட நாயகன் விருது வென்றகேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "சதம் அடித்தவுடன் அவுட் ஆகி விடக் கூடாது என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். இப்படிதான் இதற்கு முன்பு இரண்டு முறை இரட்டை சதம் அடித்தேன். இந்த நாள் (டிச. 13) எனக்கு திருமண நாளாகவும் அமைந்துவிட்டது. இரட்டை சதத்தை திருமண நாள் பரிசாக எனது மனைவிக்கு அளிக்கிறேன்.
வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுவோம்' என்றார்.

மொஹாலியில் அதிகபட்ச ஸ்கோர்

மொஹாலி மைதானத்தில் ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் 392 ரன்களே அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன்பு, நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை தென்னாப்பிரிக்கா அணி எடுத்ததே இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

106
ஒரு நாள் போட்டிகளில் மிக அதிக ரன்களை அள்ளிக் கொடுத்தவர் என்ற பட்டியலில் 3-ஆவது இடத்தைப் பிடித்தார் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப். ஆஸ்திரேலியாவின் மிக் லெவிஸ் (113 ரன்கள்), பாகிஸ்தானின் வஹாப் ரியஸ் (110 ரன்கள்) முதல் 2 இடங்களில் உள்ளனர். 

208
முதலில் 126 பந்துகளில் 116 ரன்கள் குவித்திருந்த ரோஹித், கடைசி 27 பந்துகளில் 92 ரன்கள் (11 சிக்ஸ், 3 பவுண்டரி) குவித்தார்.

100
ஒரு நாள் போட்டிகளில் 300 அல்லது அதற்கும் அதிகமான ரன்களை 100 முறை குவித்த அணியாக இந்தியா திகழ்கிறது. அடுத்த இடத்தில், அதாவது 96 முறை 300 அல்லது அதற்கு அதிகமான ரன்களை ஆஸ்திரேலியா அணி குவித்துள்ளது.
18
தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், சர்வதேச முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனது 18 வயதில் பங்கேற்றார்.

இந்திய வீரர்கள் இரட்டை சதம் (ஒரு நாள் போட்டி) ஆண்டு எதிரணி

சச்சின் டெண்டுல்கர் 200* 2010 தென்னாப்பிரிக்கா
விரேந்தர் சேவாக் 219 2011 மே.இ. தீவுகள்
ரோஹித் சர்மா 209 2013 ஆஸ்திரேலியா
ரோஹித் சர்மா 264 2014 இலங்கை
ரோஹித் சர்மா 208* 2017 இலங்கை


சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக ரன்

ரோஹித் சர்மா 264 இந்தியா 2014 இலங்கை
மார்ட்டின் குப்தில் 237* நியூஸிலாந்து 2015 மே.இ.தீவுகள்
விரேந்தர் சேவாக் 219 இந்தியா 2011 மே.இ.தீவுகள்
கிறிஸ் கெயில் 215 மே.இ.தீவுகள் 2015 ஜிம்பாப்வே
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

SCROLL FOR NEXT