செய்திகள்

தோல்விக்குப் பிறகு ஜோகோவிச் பேசியதன் அர்த்தம் என்ன? டென்னிஸ் வட்டாரத்தில் பரபரப்பு!

எழில்

இன்னமும் ரோஜர் ஃபெடரர் களத்தில்தான் உள்ளார். நடாலும் உள்ளார். இந்த நிலையில் ஓய்வு பெறுவது குறித்து 30 வயது ஜோகோவிச் சூசகமாகப் பேசியுள்ளதாக டென்னிஸ் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 2-ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். உலகின் 7-ஆம் நிலை வீரரான ஆஸ்தீரியாவைச் சேர்ந்த டொமினிக் தீம், அவரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

முன்னதாக, இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 7-6(5), 6-3, 6-0 என்ற செட் கணக்கில் டொமினிக் தீம் வெற்றி பெற்றார். கடந்த 7 ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் ஜோகோவிச் வெளியேறுவது இது முதல் முறையாகும். மறுமுனையில், ஜோகோவிச்சை இதுவரை 6 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ள டொமினிக் தீம், முதல் முறையாக தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

போட்டிக்குப் பிறகு ஜோகோவிச் கூறியதாவது: கடந்த 2 மாதங்களாக பல்வேறு எண்ணங்கள் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த முடிவை எடுப்பது அவ்வளவு எளிதல்ல. பிரெஞ்சு ஓபன் போட்டிக்குப் பிறகே எனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளேன். அனைத்து வீரர்களுக்கும் இத்தகைய நிலை வரும். டொமினிக் தீம் இந்த வெற்றிக்குத் தகுதியானவர்  என்றார்.

இதையடுத்து ஜோகோவிச் ஓய்வு குறித்து சூசகமாக வெளிப்படுத்துகிறாரா அல்லது சிறிதுகாலம் இடைவெளி விட்டு மீண்டும் களத்துக்குத் திரும்புகிறாரா என்கிற விவாதம் டென்னிஸ் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது. ஃபெடரரும் நடாலும் இன்னமும் களத்தில் உள்ள நிலையில் அதற்கு முன்பு ஜோகோவிச் ஓய்வு பெறுவது சாத்தியமில்லை. சிறிது மாத ஓய்வுக்குப் பிறகு புதிய மனிதராகத் தெம்புடன் மீண்டும் களத்துக்குத் திரும்புவார் என்கிறார்கள் ஜோகோவிச் ரசிகர்கள். அதேசமயம் ஜோகோவிச்சின் பேச்சில் ஒருவித கவலை தென்படுகிறது. தொடர் தோல்விகளால் ஓய்வு குறித்து அவர் யோசித்துவருகிறார். அதனால்தான் தோல்விக்குப் பிறகு இப்படிப் பேசியுள்ளார் என்றொரு கருத்தும் நிலவுகிறது. 

பிரெஞ்சு ஓபன் போட்டிக்குப் பிறகே எனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளேன் என்று ஜோகோவிச் கூறியுள்ளார். அதுவரை டென்னிஸ் ரசிகர்களிடையே இவ்விவாதம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT