செய்திகள்

ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்துக்கு மீண்ட கோலி

DIN

ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில், பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், புதிய பட்டியலை ஐசிசி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
இதன்படி, பேட்ஸ்மேன்கள் பிரிவில் கேப்டன் விராட் கோலி 862 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடங்கும்போது இந்தப் பட்டியலில் கோலி 3-ஆவது இடத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 2-ஆவது இடத்திலும் இருந்தனர்.
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 81 ரன்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் விளாசியதை அடுத்து கோலி இந்த ஏற்றம் கண்டுள்ளார்.
இதேபோல், இந்தியாவின் தொடக்க வீரர் ஷிகர் தவன் 5 இடங்கள் ஏற்றம் கண்டு 10-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில், அணியின் சக வீரர்களான ரோஹித் சர்மா 13-ஆவது இடத்துக்கும், தோனி 14-ஆவது இடத்துக்கும் பின்தங்கினர். இருவரும் தலா ஒரு இடம் கீழிறங்கியுள்ளனர். யுவராஜ் சிங் 6 இடங்கள் முன்னேறி 88-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
பந்துவீச்சு: பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் 13 இடங்கள் முன்னேற்றம் கண்டு 23-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். உமேஷ் யாவத் 2 இடங்கள் முன்னேறி 41-ஆவது இடத்துக்கும், ஜஸ்பிரீத் பும்ரா 3 இடங்கள் முன்னேறி 43-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.
எனினும், இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சற்று பின்னடைவை சந்தித்துள்ளனர். இதில் அஸ்வின் 2 இடங்கள் பின்தங்கி 20-ஆவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 3 இடங்கள் பின்தங்கி 29-ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸில்வுட், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் முறையாக முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்து அணியினரைப் பொருத்த வரையில், பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஜோ ரூட் ஓரிடம் முன்னேறி 4-ஆவது இடத்துக்கும், பென் ஸ்டோக்ஸ் 9 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 20-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர். பந்துவீச்சாளர்கள் வரிசையில், லியாம் பிளங்கெட் 7 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 9-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். ஆதில் ரஷீத் 9 இடங்கள் முன்னேறி 11-ஆவது இடத்தில் உள்ளார்.
ஆல்ரவுண்டர்: ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களில் மாற்றம் இல்லை. பென் ஸ்டோக்ஸ் ஓரிடம் முன்னேற்றம் கண்டு 6-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். ஜடேஜா 3 இடங்கள் முன்னேறி 8-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை: பயிா்கள், மின்கம்பங்கள் சேதம்

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் தலைமை தோ்தல் அலுவலா் சத்யபிரத சாகு ஆய்வு

மே 20-இல் வரதராஜபெருமாள் கோயில் வைகாசித் திருவிழா

SCROLL FOR NEXT