முகப்பு
செய்திகள்

தர்மசாலா டெஸ்ட்: முகமது சமி சேர்க்கப்படவில்லை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி சேர்க்கப்படவில்லை.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:18 AM
தர்மசாலா மைதானத்தில் வியாழக்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்.
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி சேர்க்கப்படவில்லை.


காயத்திலிருந்து மீண்டு வரும் சமி, தர்மசாலா டெஸ்ட் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இந்திய அணியின் முடநீக்கியல் நிபுணரான பேட்ரிக் ஃப்ரஹாட்டின் கண்காணிப்பின் கீழ் அவர் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது.
இதுகுறித்து, இந்திய அணி வட்டாரங்கள் கூறுகையில், 'பேட்ரிக்கின் கண்காணிப்பில் இருக்கும் முகமது சமி, ராஞ்சி டெஸ்ட் போட்டியில் கூட அணியில் இருந்தார். இதனிடையே, கடைசி டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை' என்று தெரிவித்தன.
வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான தர்மசாலா மைதானத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் முகமது சமி இல்லாதது, இந்திய அணிக்கு சற்று ஏமாற்றம் அளிக்கிறது. மறுமுனையில் ஆஸ்திரேலியா, சுழற்பந்துவீச்சாளர் ஓ'கீஃபுக்கு பதிலாக, வேகப்பந்துவீச்சாளர் ஜாக்சன் பேர்டை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது.

பயிற்சியை தவிர்த்த கோலி

காயம் குறித்து, முடநீக்கியல் நிபுணர் பேட்ரிக்குடன் ஆலோசிக்கும் கோலி.


இந்திய கேப்டன் விராட் கோலி வலது தோள்பட்டை காயம் காரணமாக வியாழக்கிழமை வலைப் பயிற்சியில் ஈடுபடவில்லை.
ராஞ்சியில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸின்போது பவுண்டரியைத் தடுக்க முயன்ற கோலிக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஞ்சி டெஸ்டிலேயே அவர் களம் இறங்கினார். எனினும், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில், 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் சனிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியினர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதற்காக சக அணியினருடன் மைதானத்துக்கு வந்த கோலி ஒரு சில உடற்பயிற்சிகளை மட்டும் மேற்கொண்டார். ஆனால், வலைப் பயிற்சியில் ஈடுபடவில்லை.
மாற்று வீரர் ஷ்ரேயாஸ்: இதனிடையே, கோலி ஆட முடியாமல் போகும் சூழ்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.

'பவுன்சருக்கு சாதகமாக இருக்கும்'


தர்மசாலா ஆடுகளம், பவுன்சர் பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருக்கும் என்று ஆடுகள பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தர்மசாலா மைதான பொறுப்பாளர் சுனில் செளஹான் கூறியதாவது:
ஆடுகளம் குறித்து அணி நிர்வாகத் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அறிவுறுத்தலும் வரவில்லை. ஆடுகளத்தின் இயல்பான தன்மையுடனேயே அதனை மேம்படுத்தி வருகிறேன். தர்மசாலா ஆடுகளம் பவுன்சருக்கு சாதகமானதாக இருக்கும். இறங்கி அடிக்கும், கட் ஷாட் அடிக்கும் பேட்ஸ்மேன்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குவதாக இருக்கும்.
இந்த களத்தில் போட்டி 5 நாள்களுக்கு நீடிக்கும். விக்கெட்டுக்கு சாதகமான மைதானமாகவே இது மேம்படுத்தப்பட்டுள்ளது. எப்போதும் போல், வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட் எடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
ஆடுகளத்தின் தன்மையை அப்படியே தொடரச் செய்யும் வகையில், அதன் மேல்பரப்பு மண்ணை சீசன் தோறும் மாற்றி வருகிறோம். லூதியானாவில் எடுக்கப்படும் குறிப்பிட்ட வகையிலான மண்ணை சமீபகாலமாக அதற்கு பயன்படுத்தி வருகிறோம் என்று சுனில் செளஹான் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →