கொல்கத்தாவை சிதறடித்தார் திரிபாதி: புணேவுக்கு 7-ஆவது வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்.
செய்திகள்கொல்கத்தாவை சிதறடித்தார் திரிபாதி: புணேவுக்கு 7-ஆவது வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்.
இதன்மூலம் 7-ஆவது வெற்றியைப் பெற்ற புணே அணி, புள்ளிகள் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியது.
புணேவின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியபோதும், தனியொருவராக நின்று கொல்கத்தா பெளலர்களை பந்தாடிய தொடக்க வீரர் ராகுல் திரிபாதி, 52 பந்துகளில் 7 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தார்.
கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் ராபின் உத்தப்பா காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றார்.
முதல் ஓவர் மெய்டன்: டாஸ் வென்ற புணே கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்ய, கொல்கத்தாவின் இன்னிங்ஸை சுநீல் நரேனும், கேப்டன் கெளதம் கம்பீரும் தொடங்கினர். ஜெயதேவ் உனட்கட் வீசிய முதல் ஓவரின் முதல் 5 பந்துகளை வீணடித்த சுநீல் நரேன், கடைசிப் பந்தில் உனட்கட்டிடமே கேட்ச் ஆனார்.
இதையடுத்து வந்த ஷெல்டான் ஜாக்சன் 9 பந்துகளில் 10 ரன்கள் சேர்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மணீஷ் பாண்டே களமிறங்கினார். இதனிடையே பென் ஸ்டோக்ஸ் வீசிய 5-ஆவது ஓவரில் கேப்டன் கெளதம் கம்பீர் இரு பவுண்டரிகளை விரட்ட, ஆட்டம் சூடுபிடித்தது.
வாஷிங்டன் சுந்தர் வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசிய கம்பீர், அதற்கடுத்த பந்தில் ரஹானேவிடம் கேட்ச் ஆனார். அவர் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு களம்புகுந்த யூசுப் பதான் 9 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது 9.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா.
கிராண்ட்ஹோம் அதிரடி: இதையடுத்து பாண்டேவுடன் இணைந்தார் டி கிராண்ட்ஹோம். ஷர்துல் தாக்குர் வீசிய 11-ஆவது ஓவரில் பாண்டே ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாச, இம்ரான் தாஹிர் வீசிய அடுத்த ஓவரில் டி கிராண்ட்ஹோம் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார். கொல்கத்தா 14.1 ஓவர்களில் 103 ரன்களை எட்டியபோது பாண்டேவின் விக்கெட்டை இழந்தது. அவர் 32 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து சூர்யகுமார் களமிறங்க, டி கிராண்ட் ஹோம் 19 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்து உனட்கட் பந்துவீச்சில் சுந்தரிடம் கேட்ச் ஆனார். இதன்பிறகு கிறிஸ்டியான் பந்துவீச்சில் சூர்யகுமார் சிக்ஸரை விளாச, கிறிஸ் வோக்ஸ் 1 ரன்னில் வீழ்ந்தார்.
சூர்யகுமார் அதிரடி: உனட்கட் வீசிய 19-ஆவது ஓவரில் சூர்யகுமார் தொடர்ச்சியாக இரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விரட்ட, அதே ஓவரில் கோல்ட்டர் நைல் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை விளாசினார். கடைசி ஓவரில் கோல்ட்டர் நைல் 6 ரன்களில் நடையைக் கட்ட, கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் 16 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30, உமேஷ் யாதவ் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
புணே தரப்பில் உனட்கட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய புணே அணியில் அஜிங்க்ய ரஹானே 11 ரன்களில் நடையைக் கட்ட, ராகுல் திரிபாதியுடன் இணைந்தார் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். கோல்ட்டர் நைல் வீசிய மூன்றாவது ஓவரில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய திரிபாதி, அதே ஓவரில் மேலும் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை பறக்கவிட, அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் கிடைத்தன.
தொடர்ந்து வேகம் காட்டிய திரிபாதி, உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்ட, 4 ஓவர்களில் 47 ரன்களை எட்டியது புணே. கிறிஸ் வோக்ஸ் வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸரை விளாசிய ஸ்மித், அதே ஓவரில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து மனோஜ் திவாரி களமிறங்க, கோல்ட்டர் நைல் வீசிய 6-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை பறக்கவிட்ட திரிபாதி, 23 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனிடையே திவாரி 8 ரன்களில் நடையைக் கட்ட, பென் ஸ்டோக்ஸ் களம்புகுந்தார். மறுமுனையில் திரிபாதி வெளுத்து வாங்க, 12 ஓவர்களில் 110 ரன்களை எட்டியது புணே.
குல்தீப் யாதவ் வீசிய 13-ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார் திரிபாதி. இதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் 14, தோனி 5 ரன்களில் நடையைக் கட்ட, கிறிஸ்டியான் களம்புகுந்தார்.
இதனிடையே சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திரிபாதி, புணே 150 ரன்களை எட்டியபோது ஆட்டமிழந்தார். அவர் 52 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். கிராண்ட்ஹோம் வீசிய கடைசி ஓவரில் கிறிஸ்டியான் சிக்ஸரை விளாச, 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்து வெற்றி கண்டது புணே.
கிறிஸ்டியான் 9, வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். திரிபாதி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.