முகப்பு
செய்திகள்

கடுமையான போட்டியில் ராகுல், ஜாதவ், ரஹானேவை முந்துவாரா மணீஷ் பாண்டே?

நேற்றைய போட்டியில் விளையாடிய விதம் அவருக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. ஃபீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

இந்திய ஒருநாள் அணியில் பேட்ஸ்மேன்களின் தற்போதைய வரிசை இது: 

1. ரோஹித் சர்மா, 2. தவன், 3. கோலி, 4. ராகுல்/பாண்டே/ரஹானே 5. தோனி, 6. ஜாதவ், 7. பாண்டியா

இந்த 9 வீரர்களில் இருந்துதான் 7 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய யுவ்ராஜ் சிங்கும் அதற்கு முன்பு அணியில் இடம்பிடித்த ரெய்னாவும் இப்போது போட்டியில் இல்லை. இல்லாவிட்டால் இன்னும் கடுமையான போட்டியை வீரர்கள் சந்திக்கவேண்டியிருக்கும். 

இலங்கைக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 88 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 104 ரன்களும், கேப்டன் விராட் கோலி 96 பந்துகளில் 2 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 131 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

மணீஷ் பாண்டே-தோனி கூட்டணி கடைசிக் கட்டத்தில் அதிரடியாக ஆடியது. இதனால் இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் குவித்தது. பாண்டே 42 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 50, தோனி 42 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இதையடுத்து இந்திய அணியின் மிடில் ஆர்டரில் நடைபெறும் போட்டியில் மணீஷ் பாண்டேவும் இணைந்துள்ளார். 

ரோஹித், தவன் ஆகிய இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் அவர்களைத் தொடக்க வீரர்களாகவே களமிறக்கமுடியும். பிறகு கோலி, தோனி, பாண்டியா ஆகியோரின் இடமும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களும் அணியில் நிச்சயம் இடம்பெறுவார்கள். ஜாதவ் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடியதோடு தேவைப்பட்ட நேரத்தில் விக்கெட்டுகளையும் வீழ்த்துவதால் அவருடைய இடத்துக்கும் பெரிதாக ஆபத்து இல்லை.

இந்நிலையில் மீதமுள்ள ஒரு இடத்துக்கு ராகுல், மணீஷ் பாண்டே, ரஹானே ஆகிய மூவரும் போட்டியிடுகிறார்கள். ஒருவேளை ஜாதவின் இடமும் கேள்விக்குறியானால் இரு இடங்களுக்கு நான்கு பேர் போட்டி போடுகிறார்கள் என்றும் கூறலாம். 

மிடில் ஆர்டரில் கே.எல். ராகுலால் இதுவரை தனது திறமையை நிரூபிக்க முடியவில்லை. ரஹானேவையும் இந்திய அணி அவ்வளவாக நம்புவதில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அவர் மிகச்சிறப்பாக விளையாடினாலும் ஒருநாள் அணியில் அவருடைய இடம் இன்னமும் நிரந்தரமாகவில்லை. இந்நிலையில் 27 வயது மணீஷ் பாண்டேவுக்கு மற்றவர்களை விடவும் அதிக வாய்ப்புள்ளதாகவே கூறமுடியும். நேற்றைய போட்டியில் அவர் விளையாடிய விதம் அவருக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. மேலும் ஃபீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். சமீபத்தில் இந்தியா ஏ அணியிலும் ஏராளமான ரன்களைக் குவித்து நல்ல ஃபார்மில் உள்ளவர்.

இதுவரை 13 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மணீஷ் பாண்டே, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமெடுத்து இந்திய அணி 330 ரன்களைத் தாண்ட உதவினார். 

எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் மற்ற வீரர்களை விடவும் மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு அளிக்கவே இந்திய அணி விரும்பும். அதற்கான சூழல் பாண்டேவுக்கு அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.