செய்திகள்

ஆஸ்திரேலியாவை பந்தாடியது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

ஏ.வி. பெருமாள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.
இதன்மூலம் 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது இந்தியா.
இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவாக வெளியேறியபோதிலும், ஹார்திக் பாண்டியா-எம்.எஸ்.தோனி ஜோடி அபாரமாக ஆடி இந்தியா வலுவான ஸ்கோரை குவிக்க உதவியது. 
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ஷிகர் தவன் விலகியதால், அவருக்குப் பதிலாக அஜிங்க்ய ரஹானே சேர்க்கப்பட்டார். 4-ஆவது பேட்ஸ்மேன் இடத்தில் மணீஷ் பாண்டே சேர்க்கப்பட்டதால், கே.எல்.ராகுலுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணியில் காயமடைந்த தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்சுக்குப் பதிலாக ஹில்டன் கார்ட்ரைட் சேர்க்கப்பட்டார். கார்ட்ரைட்டுக்கு இது அறிமுக ஆட்டமாகும்.
ஆரம்பமே அதிர்ச்சி: டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து அஜிங்க்ய ரஹானேவும், ரோஹித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்ûஸ தொடங்கினர். பேட் கம்மின்ஸ், நாதன் கோல்ட்டர் நீல் ஆகியோர் அசத்தலாக பந்துவீச, ரோஹித்தும், ரஹானேவும் நிதானமாக ஆடினர். 
4-ஆவது ஓவரை வீசிய கோல்ட்டர் நீல், ரஹானேவை வீழ்த்தினார். 15 பந்துகளைச் சந்தித்த ரஹானே 5 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் கேட்ச் ஆனார். 
இதயைடுத்து 6-ஆவது ஓவரை வீசிய கோல்ட்டர் நீல் முதல் பந்தில் கேப்டன் கோலியையும் (0), 3-ஆவது பந்தில் மணீஷ் பாண்டேவையும் (0) வீழ்த்தினார். இதனால் இந்தியா 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு களம்புகுந்த கேதார் ஜாதவ், முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்கினார். இதுதான் இந்தியா சார்பில் அடிக்கப்பட்ட முதல் பவுண்டரி. இதனால் முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்தது இந்தியா.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் வீசிய 16-ஆவது ஓவரின் 4-ஆவது பந்தில் பவுண்டரியை விளாசிய ரோஹித் சர்மா, அதே ஓவரின் கடைசிப் பந்தில் கோல்ட்டர் நீலிடம் கேட்ச் ஆனார். அவர் 44 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தார். 
கேதார் ஜாதவ் 40: இதையடுத்து கேதார் ஜாதவுடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி. இந்த ஜோடி நிதானமாக ஆட, இந்தியாவின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. ஸ்டாய்னிஸ் வீசிய 22-ஆவது ஓவரில் கேதார் ஜாதவ் ஆட்டமிழந்தார். அவர் 54 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து தோனியுடன் ஜோடி சேர்ந்தார் ஹார்திக் பாண்டியா. இந்த ஜோடி நிதானமாக ஆட, 23.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா. பாண்டியாவும், தோனியும் சிறப்பாக ஆட, மெதுவாக சரிவிலிருந்து மீண்ட இந்தியா, 36 ஓவர்களில் 5 விக்கெட் இப்புக்கு 148 ரன்கள் எடுத்திருந்தது.
பாண்டியா சிக்ஸர் மழை: ஆடம் ஸம்பா வீசிய 37-ஆவது ஓவரில் பாண்டியா தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசியதோடு, 48 பந்துகளில் அரை சதம் கண்டார். அந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள் கிடைத்தன. தொடர்ந்து அதிரடியாக ஆடிய பாண்டியா, ஆடம் ஸம்பா வீசிய 41-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். அவர் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் குவித்தார். பாண்டியா-தோனி ஜோடி118 ரன்கள் குவித்தது. 
தோனி 79: இதையடுத்து தோனியுடன் இணைந்தார் புவனேஸ்வர் குமார். இந்த ஜோடி சிறப்பாக ஆட, இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர ஆரம்பித்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய தோனி, 75 பந்துகளில் அரை சதம் கண்டார். இது ஒருநாள் போட்டிகளில் அவருடைய 66-ஆவது அரை சதமாகும். 
ஃபாக்னர் வீசிய 48-ஆவது ஓவரில் தோனி ஒரு சிக்ஸரையும், இரு பவுண்டரிகளையும் விளாச, இந்தியா 250 ரன்களைக் கடந்தது. தொடர்ந்து வேகம் காட்டிய தோனி, ஃபாக்னர் வீசிய கடைசி ஓவரில் சிக்ஸரை விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். அவர் 88 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் குவித்தார். இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது இந்தியா. புவனேஸ்வர் குமார் 32, குல்தீப் யாதவ் ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் கோல்ட்டர் நீல் 3 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா திணறல்: இந்தியா பேட் செய்த பிறகு மழை பெய்ததால் ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைபட்டது. இதனால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவுக்கு 21 ஓவர்களில் 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரரான கார்ட்ரைட் 1 ரன் எடுத்த நிலையில் பூம்ரா பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
பின்னர் வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 1 ரன் எடுத்த நிலையில் பாண்டியா பந்துவீச்சில் பூம்ராவிடம் கேட்ச் ஆக, டிராவிஸ் ஹெட் 5 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து மேக்ஸ்வெல் களமிறங்க, மறுமுனையில் நிதானம் காட்டிய டேவிட் வார்னர் 28 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் ஆனார். இதனால் ஆஸ்திரேலியா 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
மிரட்டிய மேக்ஸ்வெல்: இதையடுத்து மேக்ஸ்வெல்லுடன் இணைந்தார் மார்கஸ் ஸ்டாய்னிஸ். ஒரு கட்டத்தில் 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. ஆனால் குல்தீப் வீசிய 11-ஆவது ஓவரில் மேக்ஸ்வெல் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாச, அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா. 
இதையடுத்து யுவேந்திர சாஹல் வீசிய 12-ஆவது ஓவரின் 5-ஆவது பந்தில் சிக்ஸரை விளாசிய மேக்ஸ்வெல், அடுத்த பந்திலும் சிக்ஸரை விளாச முயன்றார். ஆனால் பந்து எல்லையில் நின்ற பாண்டேவின் கையில் தஞ்சம்புகுந்தது. 18 பந்துகளைச் சந்தித்த மேக்ஸ்வெல் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார். 
மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தபோதே ஆஸ்திரேலியாவின் வெற்றியும் பறிபோனது. அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் 3, மேத்யூ வேட் 9 ரன்களில் நடையைக் கட்ட, பின்னர் வந்த பேட் கம்மின்ஸ் 9 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு ஒருபுறம் ஜேம்ஸ் ஃபாக்னர் போராட, மறுமுனையில் திணறிய நாதன் கோல்ட்டர் நீல் 2 ரன்களில் வீழ்ந்தார். இறுதியில் 21 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது ஆஸ்திரேலியா. ஜேம்ஸ் ஃபாக்னர் 32, ஆடம் ஸம்பா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியத் தரப்பில் யுவேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் அசத்திய ஹார்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். 
இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது இந்தியா. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது ஆட்டம் வரும் 21-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

ஸ்கோர் போர்டு

இந்தியா

அஜிங்க்ய ரஹானே (சி) வேட் (பி) கோல்ட்டர் நீல் 5 15
ரோஹித் சர்மா (சி) கோல்ட்டர் நீல் (பி) ஸ்டாய்னிஸ் 28 44
விராட் கோலி (சி) மேக்ஸ்வெல் (பி) கோல்ட்டர் நீல் 0 4
மணீஷ் பாண்டே (சி) வேட் (பி) கோல்ட்டர் நீல் 0 2
கேதார் ஜாதவ் (சி) கார்ட்ரைட் (பி) ஸ்டாய்னிஸ் 40 54
எம்.எஸ்.தோனி (சி) வார்னர் (பி) ஃபாக்னர் 79 88
ஹார்திக் பாண்டியா (சி) ஃபாக்னர் (பி) ஸம்பா 83 66
புவனேஸ்வர் குமார் நாட் அவுட் 32 30
குல்தீப் யாதவ் நாட் அவுட் 0 0
உதிரிகள் 14 
மொத்தம் (50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு) 281

விக்கெட் வீழ்ச்சி: 1-11 (ரஹானே), 2-11 (கோலி), 3-11 (பாண்டே), 4-64 (ரோஹித்), 5-87 (கேதார் ஜாதவ்), 6-205 (பாண்டியா), 7-277 (தோனி).

பந்துவீச்சு: பேட் கம்மின்ஸ் 10-1-44-0,
நாதன் கோல்ட்டர் நீல் 10-0-44-3, ஜேம்ஸ் ஃபாக்னர் 10-1-67-1,
மார்கஸ் ஸ்டாய்னிஸ் 10-0-54-2, ஆடம் ஸம்பா 10-0-66-1

ஆஸ்திரேலியா

டேவிட் வார்னர் (சி) தோனி (பி) குல்தீப் 25 28
ஹில்டன் கார்ட்ரைட் (பி) பூம்ரா 1 8
ஸ்டீவன் ஸ்மித் (சி) பூம்ரா (பி) பாண்டியா 1 5
டிராவிஸ் ஹெட் (சி) தோனி (பி) பாண்டியா 5 6 
கிளன் மேக்ஸ்வெல் (சி) பாண்டே (பி) சாஹல் 39 18
மார்கஸ் ஸ்டாய்னிஸ் (சி) சப்ஸ்டியூட்-ஜடேஜா (பி) குல்தீப் 3 10
மேத்யூ வேட் (ஸ்டெம்பிங்) தோனி (பி) சாஹல் 9 10 
ஜேம்ஸ் ஃபாக்னர் நாட் அவுட் 32 25
பேட் கம்மின்ஸ் (சி) பூம்ரா (பி) சாஹல் 9 7
நாதன் கோல்ட்டர் நீல் (சி) ஜாதவ் (பி) குமார் 2 5
ஆடம் ஸம்பா நாட் அவுட் 5 4
உதிரிகள் 6 
மொத்தம் (21ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு) 137

விக்கெட் வீழ்ச்சி: 1-15 (கார்ட்ரைட்), 2-20 (ஸ்மித்), 3-29 (டிராவிஸ்), 4-35 (வார்னர்), 5-76 (மேக்ஸ்வெல்), 6-76 (ஸ்டாய்னிஸ்), 7-93 (வேட்), 8-109 (கம்மின்ஸ்), 9-127 (கோல்ட்டர் நீல்).

பந்துவீச்சு: புவனேஸ்வர் குமார் 4-0-25-1, ஜஸ்பிரித் பூம்ரா 4-0-20-1, ஹார்திக் பாண்டியா 4-0-28-2, குல்தீப் யாதவ் 4-0-33-2, யுவேந்திர சாஹல் 5-0-30-3

கறுப்பு சட்டைக்கு தடை

நீட் தேர்வு, அனிதா மரணம் தொடர்பாக சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை காண சேப்பாக்கம் மைதானத்துக்கு செல்பவர்கள் அனிதா மரணம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கொண்டு செல்லுமாறும், சிக்ஸர், பவுண்டரி அடிக்கப்படும்போது அந்த பதாகைகளை காண்பிக்குமாறும் சில போராட்டக்காரர்கள் முகநூல் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன் எதிரொலியாக ரசிகர்கள் கடும் சோதனைக்குப் பிறகே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக, கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்த ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் அவர்கள் அருகில் இருந்த கடைகளுக்கு சென்று வேறு சட்டை வாங்கி அணிந்து கொண்டு ஆட்டத்ததைக் காண வந்தனர்.


"தோனி, தோனி, தோனி...'

வழக்கமாக இந்தியாவின் விக்கெட் விழுகிறபோது, மைதானத்தில் நிசப்தம் நிலவும். ஆனால் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபோது, ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். சென்னை ரசிகர்களின் நாயகனான தோனி, அடுத்ததாக பேட் செய்ய களமிறங்கியதே அந்த உற்சாகத்துக்கு காரணம். தோனி களம்புகுந்தபோது "தோனி, தோனி, தோனி' என ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்ப, மைதானம் அதிர்ந்தது. அந்த நிமிடம், சென்னை ரசிகர்களிடையே தோனிக்கு இருக்கும் "மாஸ்' இன்னும் குறையவில்லை என்பதை உணரவைத்தது.
மிடில் ஓவர்களில் தோனிக்கு பந்துவீசினார் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸம்பா. அப்போது தோனி அடித்த பந்தை பிடித்த ஆடம் ஸம்பா, தோனியை நோக்கி பந்தை எறிவது போல் சைகை செய்தார். இதையடுத்து கோபமடைந்த ரசிகர்கள் உரக்கக் கத்தி ஆடம் ஸம்பாவை மிரட்ட, ஆஸ்திரேலிய வீரர்கள் அமைதியாகினர்.

67

இந்த ஆட்டத்தில் 79 ரன்கள் குவித்த தோனி தனது முதல் பவுண்டரியை அடிக்க 67 பந்துகளை எடுத்துக் கொண்டார். அதன்பிறகு சந்தித்த 21 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளை விளாசினார் தோனி. 

118

தோனி}பாண்டியா ஜோடி 19.2 ஓவர்களில் 118 ரன்கள் குவித்தது. இந்தியா 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ஜோடி சேர்ந்த பாண்டியாவும், தோனியும், இந்தியா 206 ரன்களை எட்டியபோதுதான் பிரிந்தனர்.

228.57

இந்த ஆட்டத்தில் பாண்டியா சந்தித்த கடைசி 21 பந்துகளில் அவருடைய சராசரி 228.57. ஆடம் ஸம்பா வீசிய 37}ஆவது ஓவரில் 5 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார் பாண்டியா. 

4

இந்த ஆண்டில் சர்வதேசப் போட்டியில் 4}ஆவது முறையாக ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசியுள்ளார் பாண்டியா. இதற்கு முன்னர் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இரு முறை ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட பாண்டியா, கடந்த மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார்.

100

இந்த ஆட்டத்தில் அரை சதமடித்ததன் மூலம் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 100 அரை சதங்களை (ஒரு நாள் போட்டியில் 66, டெஸ்டில் 33, டி20 போட்டியில் 1) விளாசிய 4}ஆவது இந்தியர் என்ற பெருமை தோனிக்கு கிடைத்தது. சச்சின் 164 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

161.53

பாண்டியா ஆட்டமிழந்த பிறகு சந்தித்த 26 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார் தோனி. அப்போது அவருடைய ஸ்டிரைக் ரேட் 161.53.

53

கடைசி 5 ஓவர்களில் 53 ரன்கள் குவித்தது இந்தியா. இந்த ஆட்டத்தின் முதல் 36 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்த இந்திய அணி, அடுத்த 14 ஓவர்களில்133 ரன்கள் குவித்தது.

50

டேவிட் வார்னர் , குல்தீப் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் ஆனார். இதன்மூலம் 50 ஆஸ்திரேலியர்களை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர் என்ற பெருமை தோனிக்கு கிடைத்தது.

100.25

சென்னையில் நடைபெற்ற ஒரு நாள் ஆட்டங்களில் தோனியின் சராசரி 100.25. இங்கு 6 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள தோனி 2 சதம், 2 அரை சதங்களுடன் 401 ரன்கள் விளாசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT