செய்திகள்

இங்கிலாந்திடம் தோல்வி உலகக் கோப்பைக்கு நேரடித் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது மே.இ.தீவுகள்

DIN

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது மேற்கிந்தியத் தீவுகள். 
இதனால் 2019 உலகக் கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 30.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது. 
அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டமிழக்காமல் 97 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். ஜோ ரூட் 54 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் வில்லியம்ஸ் 2 விக்கெட் எடுத்தார். பேர்ஸ்டோவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 
இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது ஆட்டம் நாட்டிங்காமில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 5-0 அல்லது 4-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் மட்டுமே, 2019 உலகக் கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதி பெற முடியும் என்ற நிலையில் களமிறங்கியது மேற்கிந்தியத் தீவுகள். 
ஆனால் முதல் ஆட்டத்தில் தோற்றதன் மூலம் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது மேற்கிந்தியத் தீவுகள். இதனால், இலங்கை அணி, உலகக் கோப்பை போட்டியில் விளையாட நேரடித் தகுதி பெற்றுள்ளது. 
1975, 1979 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணியால், முதல்முறையாக உலகக் கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதி பெற முடியாமல் போயிருக்கிறது. இது அந்நாட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. அடுத்ததாக தகுதிச் சுற்றில் விளையாடி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது மேற்கிந்தியத் தீவுகள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT