தொடங்கியது காமன்வெல்த் கேம்ஸ்! (படங்கள்)
ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன...
ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டியில் இந்தியா, பிரிட்டன், கனடா, கானா, கயானா, கென்யா, மலேசியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், ஸ்காட்லாந்து, இலங்கை, உகாண்டா உள்பட 71 நாடுகள் பங்கேற்கின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்த முறை (2018) ஆஸ்திரேலிய அரசாங்கம் நடத்துகிறது. அந்நாடு 5-வது முறையாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. பாட்மிண்டன், குத்துச்சண்டை, கூடைப்பந்து, ஹாக்கி, தடகளம், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 19 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதற்கு முன்பு கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20-ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தன. கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின் ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் இந்தியா 5-வது இடம் பிடித்தது. அந்தப் போட்டியில் மொத்தம் 64 பதக்கங்களை (15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம்) நமது வீரர்கள் அள்ளி வந்தனர்.
இந்தியா சார்பில் 219 வீரர்/வீராங்கனைகள் களத்தில் இறங்க உள்ளனர். இவர்களுடன் பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், இயன்முறை சிகிச்சை நிபுணர்கள், வீரர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள மேலாளர்கள், அதிகாரிகளும் உடன் சென்றுள்ளார்கள்.
கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்கியுள்ளன. அனைத்து நாடுகளின் வீரர்களும் பங்கேற்கும் தொடக்க விழா அணிவகுப்பில், புகழ்பெற்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.
நாளை முதல் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகின்றன.