செய்திகள்

உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் இறுதிச்சுற்றில் சிந்து - நஜோமி மோதல்

DIN

சீனாவில் நடைபெறும் உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினார். அதில் அவர் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொள்கிறார்.
ஆடவர் பிரிவில் பங்கேற்றிருந்த இந்திய வீரர் சமீர் வர்மா அரையிறுதியில் தோல்வியடைந்தார்.
முன்னதாக மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஒன்றில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை எதிர்கொண்ட சிந்து 21-16, 25-23 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 54 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
இத்துடன் இன்டனோனை 8-ஆவது முறையாக சந்தித்த சிந்து, தனது 4-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார். மேலும், உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தொடர்ந்து 2-ஆவது முறையாக முன்னேறியுள்ளார் சிந்து. 
இறுதிச்சுற்றில் அவர் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொள்கிறார். கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் ஒகுஹராவிடம் தோல்வியடைந்த சிந்து, இதில் அவருக்கு பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.
ஒகுஹரா தனது அரையிறுதியில், சக நாட்டவரான அகானே யமாகுசியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய சிந்து கூறியதாவது:
நான் 3 புள்ளிகள் முன்னிலையில் இருந்தபோது, பதட்டமடைந்து சில தவறுகள் செய்தேன். பின்னர் அதிலிருந்து மீண்டு முன்னிலையை தக்க வைத்தேன். நீண்ட ரேலிக்கள் விளையாடும்போது சற்று பொறுமையுடன் ஆட வேண்டியிருந்தது.
அதிக வெள்ளிப் பதக்கங்கள் வென்றிருந்தாலும், தங்கம் வெல்வதற்கான நெருக்கடி இல்லை. நான் முடிந்த வரையில் ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறேன். பட்டம் வெல்லும் பட்சத்தில் மிகுந்த மகிழ்ச்சியடைவேன் என்று சிந்து கூறினார்.
2016 ரியோ ஒலிம்பிக், 2017 மற்றும் 2018 உலக சாம்பியன்ஷிப், ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் சிந்து இறுதிச்சுற்று வரை முன்னேறி வெள்ளியுடன் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
சமீர் வர்மா தோல்வி: இதனிடையே இப்போட்டியில் முதல் முறையாக பங்கேற்ற இந்திய வீரர் சமீர் வர்மா, அரையிறுதியில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். சீனாவின் ஷி யுகியை எதிர்கொண்ட சமீர் வர்மா, 21-12, 20-22, 17-21 என்ற செட்களில் தோல்வியை சந்தித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT