ஜூனியர் உலகக் கோப்பை: அனைத்து ஆட்டங்களிலும் எதிரணிகளை ஆல் அவுட் ஆக்கிய இந்திய பந்துவீச்சாளர்கள்!
திராவிட் பயிற்சியின் கீழான இந்திய அணி இப்போட்டியில் தோல்வியே இன்றி முன்னேறி வந்துள்ளது...
பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி 47.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மெர்லோ அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் இஷான் போரெல், ஷிவா சிங், நாகர்கோடி, அனுகுல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்திய அணி 38.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களில் இலக்கை எட்டியது. கல்ரா 101, தேசாய் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
திராவிட் பயிற்சியின் கீழான இந்திய அணி இப்போட்டியில் தோல்வியே இன்றி முன்னேறி வந்துள்ளது. அதிலும், இந்த ஆட்டம் உள்பட இதுவரை ஆடிய 6 ஆட்டங்களிலும் எதிரணியை ஆல் அவுட் செய்துள்ளது. வேகப்பந்துவீச்சில் நாகர்கோடி, ஷிவம் மாவி, இஷான் போரெல் ஆகியோரும் சுழற்பந்துவீச்சில் அனுகுல் ராய், அபிஷேக் சர்மா, ஷிவா சிங் ஆகியோரும் எதிரணிகளுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கியுள்ளார்கள். அனுகுல் ராய் 14 விக்கெட்டுகளுடன் இந்தப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் கனடாவின் ஃபைசல், ஆப்கானிஸ்தானின் குவாயிஸ் அகமத் ஆகியோருடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார்.
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியினர் எடுத்த விக்கெட்டுகள்
அனுகுல் ராய் - 14 விக்கெட்டுகள்
நாகர்கோடி - 9 விக்கெட்டுகள்
ஷிவம் மாவி - 9 விக்கெட்டுகள்
இஷான் போரெல் - 6 விக்கெட்டுகள்
அபிஷேக் சர்மா - 6 விக்கெட்டுகள்
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய எதிரணிகளின் ஸ்கோர்கள்
ஆஸ்திரேலியா 216 ரன்கள்
பாகிஸ்தான் - 69 ரன்கள்
வங்கதேசம் - 134 ரன்கள்
ஜிம்பாப்வே - 154 ரன்கள்
பப்புவா நியூ கினியா - 64 ரன்கள்
ஆஸ்திரேலியா - 228 ரன்கள்