முகப்பு
செய்திகள்

ஜூனியர் உலகக் கோப்பை: இந்திய அணி சாம்பியன்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஜூனியர் உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றை இந்திய அணி வென்று...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:09 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஜூனியர் உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றை இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இரு அணிகளுமே தலா 3 முறை உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், 4-ஆவது முறையாக வாகை சூட இரு அணிகளுமே கடுமையாகப் போட்டியிட்டன. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி 47.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மெர்லோ அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் இஷான் போரெல், ஷிவா சிங், நாகர்கோடி, அனுகுல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

மழையால் இந்திய அணியின் இன்னிங்ஸ் இடையில் சிறிது நேரம் தடைப்பட்டது. தொடக்க வீரர்களான பிருத்வி ஷாவும் மன்ஜோத் கல்ராவும் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். 12-வது ஓவரில் இந்திய அணியின் ஸ்கோர் 71- ஆக இருந்தபோது 29 ரன்களில் சுதர்லேண்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் கேப்டன் பிருத்வி ஷா. அதன்பிறகும் கல்ராவுடன் ஜோடி சேர்ந்த சுப்மன் கில்லும் சிறப்பாக விளையாடினார். பந்துகளை வீணடிக்காமல் விளையாடிய கல்ரா, 47 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அரை சதத்தைக் கடந்தார். இதன்பின்பு, நன்கு ஆடிவந்த சுப்மன் கில், 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 

முக்கியமான இரு விக்கெட்டுகள் விழுந்தபிறகும் இந்திய அணி பதற்றமில்லாமல் இலக்கை எதிர்கொண்டது. கல்ரா அதிரடியாக ஆடினாலும் மிகவும் பொறுப்புடன் விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார். ஆட்டம் முடியும் தருவாயில் 101 பந்துகளில் சதத்தை எட்டி அசத்தினார் கல்ரா. எளிதான இலக்கை 38.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களுடன் எட்டியது இந்திய அணி. கல்ரா 101, தேசாய் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

திராவிட் பயிற்சியின் கீழான இந்திய அணி இப்போட்டியில் தோல்வியே இன்றி முன்னேறி வந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை இந்திய அணி சிரமமில்லாமல் எதிர்கொண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தை வென்றதோடு உலகக் கோப்பையையும் கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி ஜூனியர் உலகக் கோப்பையை நான்காவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.