முகப்பு
செய்திகள்

விஜய் ஹஸாரே கோப்பை: தமிழக அணி மீண்டும் தோல்வி!

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேச அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தியது... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:12 PM
பகிர்:

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேச அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தியது. 

சென்னையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தமிழக அணியின் தொடக்க வீரர்களான கெளசிக் காந்தியும் கங்கா ஸ்ரீதர் ராஜுவும் சொற்ப ரன்களில் வீழ்ந்தாலும் 3-வதாகக் களமிறங்கிய ஜெகதீசன், சிறப்பாக விளையாடி 99 ரன்கள் எடுத்தார். சதமடிக்க முடியாமல் புனீத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பாபா அபரஜித் 43, விஜய் சங்கர் 84, அனிருத் 39 ரன்கள் எடுத்து தமிழக அணி 300 ரன்கள் எடுக்க உதவினார்கள். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தமிழக அணி 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது.

கடினமான இந்த இலக்கை மத்திய பிரதேச அணி சிறப்பாக எதிர்கொண்டது. தொடக்க வீரர் ரஜத் படிதர் பிரமாதமாக விளையாடி 111 பந்துகளில் 4 சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் 158 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். மூன்றாவதாகக் களமிறங்கிய ரமீஸ் கான் 78 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 46 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணி வெற்றி பெற்றது. தமிழக அணியில் அஸ்வின் 10 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 10 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்தார். 

300 ரன்கள் எடுத்தபோதும் தமிழக அணியால் வெற்றி பெறமுடியாமல் போனது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.