முகப்பு
செய்திகள்

3-ஆவது டெஸ்ட்: 187 ரன்களுக்கு சுருண்ட இந்தியா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 187 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

Updated On : 24 ஜனவரி, 2018 at 8:34 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:34 PM

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. 

கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. செஞ்சுரியனில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. 

இந்நிலையில், இப்போட்டிக்கான  இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ரஹானேவும் அஸ்வினுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமாரும் இடம்பெற்றனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 187 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 54 ரன்களுக்கு லுங்கி நிகிடி பந்துவீச்சில் டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

179 பந்துகளை சந்தித்த புஜாரா 50 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். தென் ஆப்பிரிக்க அணியின் அற்புதமான வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இதர வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுடன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

8-ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய புவனேஸ்வர் குமார் சற்று நிலைத்து ஆடி 30 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் ஸ்கோர் உயர உதவி செய்தார்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளும், மோர்கல், பிலாண்டர், பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நிகிடி 1 விக்கெட் எடுத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.