முகப்பு
செய்திகள்

நாளை முதல் போட்டி: இங்கிலாந்தின் எழுச்சியை சமாளிக்குமா இந்தியா?

பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை துவம்சம் செய்து எழுச்சியுடன் உள்ள இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Updated On : 2 ஜூலை, 2018 at 6:30 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:37 PM

பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை துவம்சம் செய்து எழுச்சியுடன் உள்ள இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அயா்லாந்து, இங்கிலாந்து நாடுகளில் டி 20, ஒரு நாள், டெஸ்ட் தொடா்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. பலம் குறைந்த அயா்லாந்து அணியை 2-0 என டி 20 தொடரில் இந்தியா வீழ்த்தியது.

தற்போது இங்கிலாந்துடன் 3 டி 20, 3 ஒரு நாள், 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர்களில் மோதுகிறது. ஜூலை 3, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டி 20 ஆட்டங்களும், 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டிகளும்,  ஆகஸ்ட் 1 முதல் 5 வரை முதல் டெஸ்ட், 9 முதல் 13 வரை 2-ஆவது டெஸ்ட், 18 முதல் 22 வரை 3-ஆவது டெஸ்ட், ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3 வரை 4-ஆவது டெஸ்ட், செப்டம்பர் 7 முதல் 11 வரை 5-ஆவது டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.

Advertisement

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. ஆஸி. அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒரு நாள் தொடரில் 4-1 என வீழ்த்தியும், அண்மையில் இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் போட்டித் தொடரில் 5-0 என ஓயிட்வாஷ் செய்து அபார ஆட்டத்திறனுடன் இங்கிலாந்து பலமாக உள்ளது. 

கடந்த 3 ஆண்டுகளில் 68 ஒருநாள் ஆட்டங்களில் 48-இல் இங்கிலாந்து வென்றுள்ளது. ஆஸி. அணிக்கு எதிராக 481 ரன்களை குவித்து உலக சாதனையும் புரிந்துள்ளது. 400-க்கு மேல் 3 முறையும், 350-க்கு மேல் 11 முறையும் குவித்துள்ளது குறிப்படித்தக்கது.

அதே நேரத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் பலமாக உள்ளது. கோலி, தோனி, ராகுல், ரெய்னா, பாண்டியா, தவன் உள்ளிட்டோா் பேட்டிங்கில் சிறப்பாக ஆடி வருகின்றனா். அதே நேரத்தில் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சாஹல், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். 

இரு அணிகளும் சமபலத்துடன் விளங்குவதால் இந்த தொடர் இரு அணிகளுக்கும் சவால் மிகுந்த ஒன்றாக இருக்கப்போகிறது. மேலும் இதில் வெல்லப்போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.