முகப்பு
செய்திகள்

490 ரன்கள் எடுத்து ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து மகளிர் அணி புதிய உலக சாதனை!

ஆரம்பம் முதல் நியூஸிலாந்து வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினார்கள்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:16 PM
பகிர்:

ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இதுவரை எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் - 444/3. 2016-ல் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து எடுத்தது.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் - 455/5. 1997-ல் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக நியூஸிலாந்து எடுத்தது.

இந்த இரு சாதனைகளும் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளன. 

Advertisement

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 490 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளது நியூஸிலாந்து மகளிர் அணி.

டப்ளினில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் நியூஸிலாந்து வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினார்கள். தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான பேட்ஸ் 94 பந்துகளில் 2 சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் 151 ரன்கள் எடுத்து அசத்தினார். க்ரீன் 77 பந்துகளில் 121 ரன்களும் கெர் 45 பந்துகளில் 81 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரைப் பெருமளவு உயர்த்தி உலக சாதனை படைக்க உதவினார்கள். இதையடுத்து 50 ஓவர்களில் நியூஸிலாந்து மகளிர் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் எடுத்தது. அயர்லாந்தின் கரா முர்ரே 10 ஓவர்கள் வீசி 119 ரன்கள் கொடுத்தார். இதுவும் உலக சாதனைதான். ஆடவர், மகளிர் என இரு தரப்பு ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களிலும் இவ்வளவு ரன்களை யாரும் கொடுத்ததில்லை.

கடினமான இலக்கைத் துளியும் சமாளிக்க முடியாமல் 35.3 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது அயர்லாந்து மகளிர் அணி. இதனால் 346 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து மகளிர் அணி முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்றது. இந்த ஆட்டம் அந்த அணி வீராங்கனைகளுக்கு மறக்கமுடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.  

ஓர் அணியின் அதிக ஒருநாள் ரன்கள் - ஆடவர் & மகளிர்

490/4 - நியூஸிலாந்து மகளிர் vs அயர்லாந்து மகளிர், 2018 
455/5 - நியூஸிலாந்து மகள்ர் vs பாகிஸ்தான் மகளிர், 1997
444/3 - இங்கிலாந்து ஆடவர் vs பாகிஸ்தான் ஆடவர், 2016
443/9 - இலங்கை ஆடவர் vs நெதர்லாந்து ஆடவர், 2006

ஒருநாள் ஆட்டத்தில் அதிக ரன்களைக் கொடுத்த பந்துவீச்சாளர்கள் - ஆடவர் & மகளிர் 

119/2 - கரா முர்ரே (நியூஸிலாந்து மகளிர் vs அயர்லாந்து மகளிர், 2018)
113/0 - மிக் லூயிஸ் (ஆஸ்திரேலியா ஆடவர் v தென் ஆப்பிரிக்கா, 2006)
111/1 - ஷாய்ஸா கான் (பாகிஸ்தான் மகளிர் v ஆஸ்திரேலியா மகளிர், 1997)
110/0 - வஹாப் ரியாஸ் (பாகிஸ்தான் ஆடவர் v இங்கிலாந்து ஆடவர், 2016)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments