முகப்பு
செய்திகள்

இலங்கை கேப்டன் சண்டிமல் மீது மற்றொரு புகார்: நெருக்கடியில் இலங்கை அணி!

அடுத்த இலங்கை அணி கேப்டன் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:00 PM
பகிர்:

இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. செயின்ட்லூசியாவில் இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியினர் வெள்ளிக்கிழமை பந்தின் நிலையை மாற்ற முயன்றதாக நடுவர்கள் அலீம் தர், இயான் கெளட் ஆகியோர் புகார் செய்தனர். இதனால் சனிக்கிழமை 2 மணி நேரம் போட்டியில் பங்கேற்காமல் சண்டிமல் தலைமையில் இலங்கை அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததால் இலங்கை வீரர்கள் மீண்டும் ஆடத்தொடங்கினர். கடைசியில் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

ஐசிசி நடத்தை விதிகள் 2.2.9. மீறியதாக சண்டிமால் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்தைச் சேதப்படுத்தியதாக ஆஸி. கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர், வீரர் பான்கிராப்ட் ஆகியோர் மீது தடை விதிக்கப்பட்டதால் சண்டிமலுக்கு என்ன விதமான தடை விதிக்கப்படும் என்று கிரிக்கெட் உலகம் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் பிரச்னையை அணுகியது.

Advertisement

இந்நிலையில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சண்டிமலுக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்டில் சண்டிமலால் கலந்துகொள்ளமுடியாது. ஒரு டெஸ்ட் தடை மட்டுமல்லாமல் சண்டிமலுக்கு 2 அபராதப் புள்ளிகளும் ஆட்ட ஊதியத்திலிருந்து 100 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களை போட்டி நடுவர் ஸ்ரீநாத் அறிவித்துள்ளார். 

மேலும் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 2 மணி நேரம் போட்டியில் பங்கேற்காமல் இருந்ததும் சிக்கலை வரவழைத்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்ததாக கேப்டன் சண்டிமல், இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திகா, மேலாளர் அசங்கா குருசின்ஹா ஆகியோர் மீதும் புதிதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் கண்ணியத்தைக் குலைத்த இந்த இரண்டாவது குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டால் சண்டிமல், பயிற்சியாளர், மேலாளர் ஆகிய மூவராலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரு டெஸ்ட் ஆட்டங்களில் மட்டுமல்லாமல் ஒருநாள் ஆட்டங்களிலும் பங்கேற்க முடியாது. ஏனெனில் அந்தக் குற்றச்சாட்டுக்கு நான்கு முதல் எட்டு அபராதப் புள்ளிகள் விதிக்கப்படலாம். இதனால் சண்டிமல் மேலும் 4 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்காமல் போகும் அபாயமும் எழுந்துள்ளது. 

இதையடுத்து அடுத்த இலங்கை அணி கேப்டன் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. தற்போது துணை கேப்டனாக உள்ள சுரங்கா லக்மல் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம். அல்லது மூத்த வீரரான ரங்கனா ஹெராத் கேப்டனாகவும் வாய்ப்பு உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments