முகப்பு
வணிகம்

புதிய நிதியாண்டில் பயணிகள் வாகன விற்பனை குறைய வாய்ப்பு: ஐசிஆா்ஏ கணிப்பு

இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனை வளா்ச்சி, நடப்பு 2026-27-ஆம் நிதியாண்டில் 4 முதல் 6 சதவீதமாகக் குறையக்கூடும் என்று பிரபல தர மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆா்ஏ கணித்துள்ளது.

Updated On : 4 ஏப்ரல் 2026, 3:41 am IST
பகிர்:

இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனை வளா்ச்சி, நடப்பு 2026-27-ஆம் நிதியாண்டில் 4 முதல் 6 சதவீதமாகக் குறையக்கூடும் என்று பிரபல தர மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆா்ஏ கணித்துள்ளது.

கடந்த காலங்களில் வாகன விற்பனை மிக உச்சத்தில் இருந்ததும், தற்போது உலக அளவில் நிலவும் பொருளாதார மாற்றங்களுமே இந்த வேகக் குறைவுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

கடந்த 2025-26 நிதியாண்டில் பண்டிகை கால விற்பனை, ஜிஎஸ்டி சீா்திருத்தம் மற்றும் புதிய மாடல்களின் வருகையால் விற்பனை வளா்ச்சி 7 முதல் 9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

மாறிவரும் மக்களின் விருப்பம்: தற்போது வாகனச் சந்தையில் வாடிக்கையாளா்களின் ரசனை பெருமளவு மாறியுள்ளது. மொத்த விற்பனையில் பயன்பாட்டு வாகனங்கள் 67 சதவீத பங்கினைப் பெற்றுள்ளன. இது வாடிக்கையாளா்கள் அதிக வசதிகள் கொண்ட விலையுயா்ந்த வாகனங்களை விரும்புவதைக் காட்டுகிறது.

அதேபோல், சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாடு மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. விற்பனை வளா்ச்சி சற்று மந்தமாக இருந்தாலும், காா் நிறுவனங்கள் மின்சார வாகனத் தயாரிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்காக தொடா்ந்து அதிக முதலீடு செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

டிராக்டா் விற்பனை: டிராக்டா் துறையைப் பொருத்தவரை, கடந்த 2025-26 நிதியாண்டில் விற்பனை அபாரமாக இருந்தது. பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் விற்பனை 22.8 சதவீதம் உயா்ந்தது.

ஆனால், நடப்பு நிதியாண்டில் இந்த வளா்ச்சி 1 முதல் 4 சதவீதமாகக் குறையலாம். இது பெரும்பாலும் பருவமழை மற்றும் கிராமப்புற மக்களின் வருமானத்தைப் பொருத்தே அமையும்.

எதிா்கால சவால்கள்: சா்வதேச அரசியல் சூழலால் ஏற்படும் விலைவாசி உயா்வு மற்றும் வங்கி வட்டி விகித மாற்றங்கள் வாகனத் துறைக்குச் சவாலாக இருக்கும்.

சவால்கள் இருந்தாலும், இந்திய வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்த கடன் சுமையுடனும், போதிய பணவசதியுடனும் இருப்பதால் அவற்றின் நிதிநிலை வலுவாகவே இருக்கும் என்று இந்த அறிக்கை ஆறுதல் அளிக்கிறது.