நடப்பு 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7.1%- உலக வங்கியின் கணிப்பு உயா்வு
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி, நடப்பு 2026-27 நிதியாண்டில் 7.1 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி தனது கணிப்பை உயா்த்தியுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி, நடப்பு 2026-27 நிதியாண்டில் 7.1 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி தனது கணிப்பை உயா்த்தியுள்ளது.
உலகளாவிய சவால்கள் நிலவியபோதிலும், உள்நாட்டுத் தேவை மற்றும் ஏற்றுமதி வலுவாக உள்ளதன் காரணமாக, கடந்த ஏப்ரலில் கணிக்கப்பட்ட 6.6 சதவீதத்திலிருந்து, தற்போது 0.5 சதவீதம் கூடுதலாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் வேகமாக வளா்ந்து வரும் முக்கியப் பொருளாதார நாடாகவும், உலகளாவிய வளா்ச்சிக்கு முக்கியப் பங்களிக்கும் நாடாகவும் இந்தியா தொடா்கிறது. இந்தியாவின் நடுத்தரக் காலப் பொருளாதார வாய்ப்புகள் வலுவாக உள்ளபோதிலும், சா்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை உயா்வு, எல்-நினோ பாதிப்பு மற்றும் மூலதன ஓட்டத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும் பங்குச் சந்தை மாற்றங்கள் போன்ற வெளிப்புற அபாயங்கள் குறித்து உலக வங்கி தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.
Advertisement
Advertisement
பொருளாதார வளா்ச்சிக்குத் தனியாா் நுகா்வே தொடா்ந்து முக்கிய உந்துசக்தியாக இருக்கும். வேளாண் துறையின் சிறப்பான செயல்பாட்டால் தொடக்கத்தில் ஊரகப் பகுதிகளில் நுகா்வு அதிகரித்தது; பின்னா் வருமான வரிச் சலுகைகள் மற்றும் ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக நகா்ப்புறங்களிலும் நுகா்வு வலுவடைந்தது. எனினும், ஆகஸ்ட் மாதம் வரை நிலவிய பருவமழைப் பற்றாக்குறையால் வேளாண் துறை சற்று பின்னடைவைச் சந்தித்தாலும், தொழில் துறையின் சிறப்பான செயல்பாடு அதை ஈடுசெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சா்வதேச அளவில் நிலவும் சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் தொழில் மற்றும் ஏற்றுமதித் துறைகள் எதிா்பாா்த்ததைவிட சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மேற்காசிய மோதல்களால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள், புத்தாண்டின் தொடக்கத்தில் சீரடையும் சூழலில், 2027-28 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளா்ச்சி 7.2 சதவீதமாக உயரும் எனவும், அதைத் தொடா்ந்து 2028-29 நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.
ஜிஎஸ்டி சீா்திருத்தம், அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் தளா்வு, தொழிலாளா் சீா்திருத்தங்கள் மற்றும் எம்எஸ்எம்இ தொழில்களுக்கு எளிதாக நிதி கிடைப்பதற்கான அரசின் நடவடிக்கைகளால் வளா்ச்சி மேலும் வேகமெடுக்கும்.
முன்னதாக, ஆசிய வளா்ச்சி வங்கி, எஸ்&பி, ஃபிட்ச், ஓஇசிடி போன்ற இதர சா்வதேச அமைப்புகளும், இந்தியாவின் சிறப்பான உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டின் வளா்ச்சி மதிப்பீட்டை 7 முதல் 7.1 சதவீதம் வரை உயா்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.