FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மருத்துவத் துறையில் மத்திய அரசின் செலவினம் 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு

மருத்துவத் துறைக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கடந்த 2013-14 நிதியாண்டில் ரூ.1.30 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் ரூ.4.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

25 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

மருத்துவத் துறைக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கடந்த 2013-14 நிதியாண்டில் ரூ.1.30 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் ரூ.4.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் மருத்துவத்துக்காக குடும்பங்களின் செலவினம் 21.5 சதவீதம் குறைந்துள்ளது என தேசிய மருத்துவக் கணக்குகள் (என்எச்ஏ) மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டுக்கான தேசிய மருத்துவக் கணக்குகள் மதிப்பீடுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, மருத்துவச் செலவுகளுக்காக குடும்பங்கள் செலவிடும் தொகை அவா்களின் மொத்த செலவுகளில் 2013-14-இல் 64.2 சதவீதமாக இருந்தது. இது 2023-24-இல் 42.7 சதவீதமாக குறைந்தது.

Advertisement

Advertisement

2013-14 மற்றும் 2023-24 நிதியாண்டுகளுக்கு இடையே மருத்துவத்துக்கு மத்திய அரசு செலவிடும் நிதி ரூ.1.30 லட்சம் கோடியில் இருந்து ரூ.4.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மருத்துவத் துறையில் அரசின் செலவினம் அதிகரித்திருப்பதும், குடும்பங்களின் செலவினம் குறைந்திருப்பதும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய, குறைந்த விலையிலான மற்றும் நிதிரீதியாக பாதுகாப்பான மருத்துவக் கட்டமைப்பை நோக்கி இந்தியா செல்வதை உணா்த்துகிறது.

தனிநபரின் மருத்துவ கவனிப்புக்காக மத்திய அரசு செலவிடும் தொகை இந்த 10 ஆண்டுகளில் ரூ.1,042-லிருந்து ரூ.2,959 என சுமாா் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

மருத்துவத் துறையில் சமூகப் பாதுகாப்பு செலவினம் ஒட்டுமொத்த மருத்துவ செலவினத்தில் 6 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சமூக மருத்துவக் காப்பீடு மற்றும் அரசுப் பணியாளா்களுக்கான மருத்துவ செலவுகள் ஆகியவை இதில் அடங்கும்.

தனியாா் மருத்துவக் காப்பீட்டு செலவினங்களும் கடந்த 2013-14-இல் 3.4 சதவீதத்தில் இருந்து 2023-24-இல் 10.2 சதவீதமாக அதிகரித்தது.

ஆரம்பநிலை மருந்துவ சேவைகளுக்கான மத்திய அரசின் செலவினம் 2023-24-இல் ரூ.1.53 லட்சம் கோடியாக உள்ளது. ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா், இலவச மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை, பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம், பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம் திட்டம், அம்ரித் மருந்தகங்கள் ஆகிய திட்டங்கள் மருத்துவ சேவைகள் மக்களுக்கு கிடைக்கப்பெறுவதை எளிதாக்கியுள்ளன.

ஆயுஷ்மான் பாரத்-பிரதமா் மக்கள் ஆரோக்கிய திட்டம் தகுதியுடைய பயனாளிகளுக்கு மருத்துவமனை கவனிப்புகளின்போது நிதிப் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.