ராகுல் டிராவிடை மீண்டும் வலம் வரும் ‘இரட்டை ஆதாயம்’ விவகாரம்!
தன் மீது வீணான குற்றச்சாட்டுகள் எதுவும் வரக்கூடாது என்பதற்காக பிசிசிஐ இந்த விவகாரத்தில் தெளிவுபடுத்தவேண்டும்...
தில்லி ஐபிஎல் அணியின் பயிற்சியாளராகவும் இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளராகவும் இருந்த ராகுல் டிராவிட் இரட்டை ஆதாயம் காரணமாக தில்லி ஐபிஎல் அணி பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் மற்றுமொரு இரட்டை ஆதாய விவகாரத்தில் அவர் பெயர் அடிபடுகிறது. இதை வெளிப்படுத்தியவர் வேறு யாருமல்ல, ராகுல் டிராவிடே தான்.
பெங்களூரில் படுகோன் - டிராவிட் விளையாட்டு மையம் என்கிற ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு கிரிக்கெடி, பேட்மிண்டன், டென்னிஸ், ஸ்குவாஷ், கால்பந்து, நீச்சல் ஆகிய விளையாட்டுகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. டிராவிட் பெயரை அந்த மையம் கொண்டிருந்தாலும் தான் எந்த விதத்திலும் அந்நிறுவனத்துடன் வியாபார ஒப்பந்தத்தில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் டிராவிட். எனினும் தன்னுடைய பெயரைக் கொண்டிருப்பதால் அதனால் இரட்டை ஆதாயப் பிரச்னை எதுவும் வருமா என்று பிசிசிஐயிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நிர்வாகக் குழுவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
ஒருவேளை பிசிசிஐ ஆட்சேபம் தெரிவித்தால் நிறுவனத்தின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்கவும் அவர் தயாராக உள்ளார். தன் மீது வீணான குற்றச்சாட்டுகள் எதுவும் வரக்கூடாது என்பதற்காக பிசிசிஐ இந்த விவகாரத்தில் தெளிவுபடுத்தவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.