முகப்பு
செய்திகள்

டி20: இந்திய மகளிர் அணி மீண்டும் தோல்வி! இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தது!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்துள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:34 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற மகளிர் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது. இத்தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியாவுக்கு இது 2-ஆவது தோல்வி. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 18.4 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வென்றது. இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய மகளிர் அணி.

இந்தியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 186 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீராங்கனை மூனி 46 பந்துகளில் 71 ரன்களும் வில்லானி 42 பந்துகளில் 61 ரன்களும் எடுத்து அசத்தினார்கள். எனினும் ஒரு வீராங்கனையாலும் இன்று சிக்ஸர் அடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்தபோது ஆஸி. வீராங்கனை மீகன் ஷட் அற்புதமாகப் பந்துவீசி ஹாட்ரிக் எடுத்துள்ளார். 2-வது ஓவரின் கடைசி இரு பந்துகளில் மந்தனாவையும் மிதாலி ராஜையும் ஆட்டமிழக்கச் செய்தார். இதன்பிறகு 5-வது ஓவரை வீசவந்த வேகப்பந்துவீச்சாளர் ஷட், தீப்தி ஷர்மாவை 2 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். இதனால் இந்திய அணி 26 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இந்திய தொடக்க வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் (17 வயது) 41 பந்துகளில் அரை சதமெடுத்தார். இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அரை சதமெடுத்த இளம் இந்திய வீராங்கனை என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஹர்மன்பிரீத் கெளர் மற்றும் அனுஜா பாட்டீல் ஆகியோர் முறையே 33 மற்றும் 38 ரன்கள் எடுத்தாலும் இந்திய அணியின் தோல்வியைத் தவிர்க்கமுடியவில்லை. இந்திய அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணி இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளதால் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ஒரு அணிகளும் இரு வெற்றிகளுடன்
இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்திய அணி வியாழன்று தனது கடைசி ஆட்டத்தை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது. சனியன்று மும்பையில் நடைபெறும் இறுதிச்சுற்றில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.