முகப்பு
செய்திகள்

கணவருக்கு எவ்விதக் கெடுதலும் ஏற்படக் கூடாது: ஷமி மனைவி உருக்கம்!

கணவருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் கூறியதாவது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:34 PM
பகிர்:

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி டேராடூனில் இருந்து காரில் தில்லி வரும்போது விபத்தில் சிக்கி லேசான காயம் அடைந்தார். டேராடூனில் உள்ள கிரிக்கெட் அகாதெமி ஒன்றில் புத்துணர்ச்சி மற்றும் பயிற்சிக்காக சென்றிருந்த ஷமி, தில்லியை நோக்கி தனது காரில் சனிக்கிழமை வந்துகொண்டிருந்தார். அப்போது டிரக் ஒன்றுடன் அவரது கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயமடைந்த ஷமிக்கு தலையில் தையல்கள் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஷமி பயிற்சி பெற்ற கிரிக்கெட் அகாதெமியின் உரிமையாளர் அபிமன்யு ஈஸ்வரன் கூறியதாவது: ஷமி நலமுடன் இருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தனிப்பட்ட இடத்தில் அவர் ஓய்வில் இருக்கிறார். மருத்துவர்கள் ஒருநாள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தினர். உடல்நலம் ஒத்துழைக்கும் பட்சத்தில் அவர் திங்கள்கிழமை தில்லி வருவார். இந்தக் காயத்தால் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில் பாதிப்பு ஏதும் இல்லை என்று அபிமன்யு கூறினார். இந்த சீசனில் ஷமி டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடுகிறார். 

முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான், காவல்துறையில் குடும்ப வன்முறைப் புகார் அளித்துள்ளார். அதுதொடர்பாக கொல்கத்தா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் கூறியதாவது:

ஷமிக்கு எவ்வித கெடுதலும் ஏற்படக்கூடாது. அவர் என் எதிரி அல்லர். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் என்னால் நிம்மதியாக இருக்கமுடியாது. அவர் உடல்நலம் தேறி வரவேண்டும் என்று அல்லாவை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.