முகப்பு
செய்திகள்

ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வில்லியம்சன் நியமனம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (27) நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 30 மார்ச், 2018 at 12:58 AM
பகிர்:

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (27) நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த அணியின் கேப்டனாகச் செயல்படவிருந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் வில்லிம்சனை கேப்டனாக அணி நிர்வாகம் நியமித்துள்ளது.
இதுகுறித்து சுட்டுரையில் வில்லியம்சன் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐபிஎல் போட்டியில் இந்த சீசனில் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி. மிகச் சிறந்த வீரர்களைக் கொண்டுள்ள அந்த அணிக்கு தலைமை ஏற்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வார்னர் தவறான நபர் அல்ல: பந்தை சேதப்படுத்த முயன்ற விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட டேவிட் வார்னர், தவறான நபர் அல்ல என்று வில்லியம்சன் தெரிவித்தார்.
இதுகுறித்து நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் அவர் மேலும் கூறுகையில், 'வார்னருடன் தொடர்பில் இருந்து வருகிறேன். எந்த அணியும் இதுபோன்று தவறிழைக்கக் கூடாது. வார்னர் தவறான நபர் அல்ல. அவரும், ஸ்மித்தும் தங்களது செயலுக்காக மன்னிப்பு கேட்டு விட்டனர். ஆகச் சிறந்த பேட்ன்ஸ்மேன்களான இருவரும் தங்களது தவறின் மூலம் அவமானத்தை ஏற்படுத்தி விட்டனர்' என்றார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வில்லியம்சன் தற்போது விளையாடி வருகிறார்.
அயல்நாட்டைச் சேர்ந்த ஒரே கேப்டன்!
இந்த ஐபிஎல் சீசனில் பங்கேற்கும் 8 அணிகளில் ஹைதராபாத் அணியைத் தவிர அனைத்து அணிகளிலும் இந்திய வீரர்களே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எம்.எஸ்.தோனி, பெங்களூரு அணிக்கு விராட் கோலி, மும்பை அணிக்கு ரோஹித் என ஹைதராபாத் தவிர அனைத்து அணிகளுக்கும் இந்திய வீரர்களே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், ஹைதராபாத் அணியில் இடம்பிடித்துள்ளவருமான ஷிகர் தவன், அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.