முகப்பு
செய்திகள்

என்னை அவமானப்படுத்தினார் பயிற்சியாளர் ரமேஷ் பவார்: மெளனம் கலைத்தார் மிதாலி ராஜ்!

பயிற்சியாளர் ரமேஷ் பவார், என்னை அலட்சியப்படுத்தத் தொடங்கினார். அருகில் நான் அமர்ந்திருந்தால் அங்கிருந்து கிளம்புவது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:44 PM
பகிர்:

மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் மூத்த வீரர் மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை. 

குரூப் பி பிரிவில் இந்திய மகளிர் அணி பலமான நியூஸியை 34 ரன்கள் வித்தியாசத்திலும், 3 முறை சாம்பியன் ஆஸி.யை 48 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அனைத்து ஆட்டங்களிலும் வென்று முதலிடம் பெற்றது. அதே நேரத்தில் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து அணி இரண்டாம் இடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஆண்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்டில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. முதலில் விளையாடிய இந்திய அணி 112 ரன்களே எடுத்தது. பிறகு அந்த இலக்கை 17.1 ஓவர்களில் அடைந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.

யாரும் எதிர்பாராதவிதத்தில் அரையிறுதி ஆட்டத்தில் மூத்த வீரர் மிதாலி ராஜ் இந்திய அணியில் இடம்பெறவில்லை. கடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. இந்நிலையில் முக்கியமான இந்த ஆட்டத்தில் மிதாலி ராஜுக்குப் பதிலாக அனுஜா பாட்டீலை மீண்டும் தேர்வு செய்தார் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர். இந்த முடிவைப் பலரும் விமரிசனம் செய்துள்ளார்கள்.

Advertisement

அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்த பிறகு தன்னுடைய இந்த முடிவு குறித்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் கூறியதாவது: நாங்கள் எடுத்த எல்லா முடிவுகளும் அணிக்காக எடுத்த முடிவுகளே. சில நேரங்களில் அவை சாதகமாக அமையும். சில நேரங்களில் அமையாது. எனவே அதுகுறித்து வருத்தம் இல்லை. நாங்கள் கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். மிதாலி ராஜைத் தேர்வு செய்வதை விடவும் வெற்றியில் பங்கேற்ற அணியைத் தக்கவைக்க முடிவு செய்தோம் என்று கூறினார். 

இந்நிலையில் தன்னுடைய மெளனம் கலைத்துள்ளார் மிதாலி ராஜ். பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரிக்கு மிதாலி ராஜ் எழுதிய கடிதத்தில் அவர் கூறியதாவது:

என்னுடைய 20 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்முறையாக நம்பிக்கையற்றவளாக, மனம் நிலைகுலைந்து போனவளாக ஆனேன். இத்தனை வருடக் காலம் நான் பங்காற்றிய விஷயங்கள் அதிகாரத்தில் உள்ள சிலருக்கு மட்டும் ஒன்றுமில்லாததாக உள்ளதா என நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். அவர்கள் என்னை அழித்து, என் நம்பிக்கையைத் தூளாக்க நினைத்தார்கள். 

டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் மீது எனக்கு எவ்வித தவறான கருத்தும் இல்லை. என்னை அணியிலிருந்து நீக்கக் கோரிய பயிற்சியாளரின் முடிவுக்கு அவர் ஆதரவளித்ததுதான் ஆச்சர்யமாகவும் காயப்படுத்தும்விதமாகவும் இருந்தது. 

என் அணிக்கு உலகக் கோப்பை பெற்றுத் தர விரும்பினேன். ஒரு நல்ல வாய்ப்பைத் தவறவிட்டதை எண்ணி வருந்துகிறேன். 

நிர்வாகக் குழுவில் உள்ள முன்னாள் இந்திய கேப்டன் டயனா எடுல்ஜியை நான் மிகவும் மதித்தேன். ஆனால் அவருடைய அதிகாரத்தை எனக்கு எதிராகப் பயன்படுத்துவார் என நான் எண்ணவேயில்லை. உலகக் கோப்பைப் போட்டியில் எனக்கு நேர்ந்த அனைத்தையும் அவருக்குத் தெரியப்படுத்தினேன். 

என்னை அணியிலிருந்து நீக்கியதற்கு அவர் ஆதரவளித்தது என்னை மிகவும் காயப்படுத்துகிறது. என்னிடம் பேசியதன் மூலம் என்ன நடந்ததென்று அவருக்குத் தெரியும். 

பயிற்சியாளர் ரமேஷ் பவார், என்னை அலட்சியப்படுத்தத் தொடங்கினார். அருகில் நான் அமர்ந்திருந்தால் அங்கிருந்து கிளம்புவது, மற்றவர்கள் பயிற்சியில் ஈடுபடும்போது அருகிலிருந்து கவனிப்பவர், நான் பயிற்சியில் இருக்கும்போது அங்கிருந்து வெளியேறிவிடுவார். நான் அவரிடம் சென்று பேசச் சென்றால் உடனே செல்போனைப் பார்க்கத் தொடங்குவார், அல்லது தொடர்ந்து நடக்க ஆரம்பிப்பார். 

இவையெல்லாம் என்னை மிகவும் சங்கடப்படுத்தின. என்னை அவமானப்படுத்துவது எல்லோருக்கும் நன்குத் தெரிந்தது. எனினும் நான் கோபப்படாமல் இருந்தேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments