ஹாக்கி உலகக் கோப்பை: பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்துள்ள ஒடிஷா அரசு!
ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு புவனேசுவரத்தின் கலிங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது...
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) சார்பில் ஒடிஷா- புவனேசுவரத்தில் 14-வது ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் நவம்பர் 28-ம் தேதி தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி வரை நடக்கிறது. மன்ப்ரீத் சிங் தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணி இதில் பங்கேற்கிறது. தற்போது ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, பெல்ஜியம், நெதர்லாந்து போன்றவை முதல் நான்கு இடங்களில் உள்ள நிலையில் இந்தியா 5-ஆவது இடத்தை உலகத் தரவரிசையில் பெற்றுள்ளது. இந்திய அணி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் மேற்பார்வையில் மீண்டும் உலக கோப்பை பட்டத்தை வெல்லும் துடிப்புடன் உள்ளது. சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்காவை வென்றால் நேராக காலிறுதிக்கு முன்னேறும். இதற்கு முன்பு 1982-ல் மும்பையிலும் 2010-ல் தில்லியிலும் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன.
ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு புவனேசுவரத்தின் கலிங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஷாருக் கான், மாதுரி தீட்சித் போன்றோரும் தொடக்க விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்கள். பராபதி மைதானத்தில் நாளை நடைபெற்றவுள்ள விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் ரஹ்மான், நடிகர் சல்மான் கான் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிலையில் தொடக்க விழாவை முன்னிட்டு ஒடிஷாவில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள் போன்றவை இன்று மதியம் 1.30 மணி வரைதான் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
நாளை முதல் உலகக் கோப்பை ஆட்டங்கள் தொடங்கவுள்ளன. நவம்பர் 28 அன்று தென் ஆப்பிரிக்காவையும் (இரவு 7 மணி), டிசம்பர் 2 அன்று பெல்ஜியத்தையும் (இரவு 7 மணி), டிசம்பர் 8 அன்று கனடாவையும் (இரவு 7 மணி) எதிர்கொள்கிறது இந்திய அணி. காலிறுதி ஆட்டங்கள் டிசம்பர் 12 முதல் தொடங்கவுள்ளன. டிசம்பர் 15 அன்று அரையிறுதி ஆட்டங்களும் டிசம்பர் 16 அன்று இறுதிச்சுற்றும் நடைபெறவுள்ளன.