இளையோர் ஒலிம்பிக் ஹாக்கி: ஆஸ்திரியாவை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி
இளையோர் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இளையோர் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
2018-ஆம் ஆண்டின் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் ஆர்ஜென்டினாவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய மகளிர் ஹாக்கி அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரியா அணியை எதிர்கொண்டது.
போட்டி தொடங்கிய 4-ஆவது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை லால்ரெம்சியாமி முதல் கோலை அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே (5-ஆவது நிமிடம்) கேப்டன் சலிமா டேடே 2-ஆவது கோலை அடித்தார். இதனால், இந்திய அணி 2-0 என வலுவான முன்னிலையுடன் போட்டியை தொடங்கியது.
Advertisement
Advertisement
இதற்கு பதிலடி தரும் வகையில் ஆஸ்திரியா அணி சார்பில் சப்ரினா ஹ்ருபி 13-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கான முதல் கோலை அடித்தார். இதனால், அந்த அணி சற்று ஆறுதல் அளித்தது.
ஆனால், 16-ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை மும்தாஸ் கான் ஒரு கோல் அடித்து 3-1 என வலுவான முன்னிலை பெற்றுத் தந்தார். அடுத்த நிமிடத்திலேயே லால்ரெம்சியாமி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால், 4-1 என இந்திய மகளிர் அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது.
இதன்பிறகு கடைசி நிமிடமான 20-ஆவது நிமிடத்தில் ஆஸ்திரியா சார்பில் லௌரா கேர்ன ஒரு கோல் அடித்தார். இதன்மூலம், போட்டியின் முடிவில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் அணி தனது அடுத்த போட்டியில் உருகுவே அணியை எதிர்கொள்கிறது.
இளையோர் ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டிகள், ஹாக்கி 5s வடிவத்தில் நடைபெறும். அதன்படி போட்டியின் மொத்த நேரம் 20 நிமிடங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.