கடைசிப் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தேன்: ‘டை’ ஆட்டம் குறித்து ஷேய் ஹோப்!
வைட் யார்க்கர் பந்துதான் வீசப்படும் எனத் தெரியும். பேட்டில் பந்து நன்கு பட்டதால் பவுண்டரி கிடைத்தது...
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் வெற்றி, தோல்வியின்றி டையில் முடிந்தது. முதலில் ஆடிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்களைக் குவித்தது. கேப்டன் விராட் கோலி 157 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் 37-வது சதமடித்தார். மேலும் துரிதமாக 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையையும் நிகழ்த்தினார். பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 321/7 ரன்களை எடுத்தது. அதன் வீரர்கள் ஷேய் ஹோப் 123, ஷிம்ரன் 94 ரன்களை விளாசினர்.
அந்த அணி வீரர் ஷேய் ஹோப் 3 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 134 பந்துகளில் 123 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 24 வயதான ஹோப் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் இறுதிவரை கடுமையாக போராடி இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்காமல் செய்தனர். கடைசி ஓவரின்போது மே.இ. அணி வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டன. கடைசிப் பந்தின்போது வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. அவுட்சைட் ஆஃப்-பில் ஃபுல் டெலிவரியை வீசினார் உமேஷ் யாதவ். அதை பவுண்டரிக்கு அனுப்பினார் ஷேய் ஹோப். இதனால் ஆட்டம் டை ஆனது.
இதுகுறித்து ஹோப் கூறியதாவது:
Advertisement
ஃபீல்டுக்கு ஏற்றாற்போல் உமேஷ் யாதவ் பந்துவீசுவார் என எண்ணியிருந்தேன். வைட் யார்க்கர் பந்துதான் வீசப்படும் எனத் தெரியும். பேட்டில் பந்து நன்கு பட்டதால் பவுண்டரி கிடைத்தது. இன்னும் நன்கு அடித்து சிக்ஸர் போகவேண்டும் என முயற்சி செய்தேன். அதன்மூலமாக எங்களால் வெற்றி பெற முடியும். ஆனால் நேற்று அதுபோல நடக்கவில்லை. நல்ல விஷயம் என்னவென்றால், நாங்கள் தோற்கவில்லை என்று கூறியுள்ளார்.