முகப்பு
செய்திகள்

டெஸ்ட் தரவரிசை : முதலிடத்தை தக்கவைத்தார் கோலி

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 12:55 AM
பகிர்:


சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சாளர்கள் வரிசையில் முகமது ஷமி 3 இடங்கள் முன்னேறி முதல் 20 இடங்களுக்குள்ளாக வந்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-ஆவது டெஸ்ட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், புதிய தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியானது.
அந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 46, அடுத்த இன்னிங்ஸில் 58 ரன்கள் எடுத்த கோலி டெஸ்ட் தரவரிசை புள்ளிகளில் முதல் முறையாக 937 புள்ளிகளை எட்டி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். சர்வதேச அளவில் டெஸ்ட் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர்கள் பட்டியலில் 11-ஆவது இடத்தில் அவர் இருக்கிறார்.
மற்றொரு இந்திய பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா தொடர்ந்து 6-ஆவது இடத்தை தக்க வைத்துக் கொண்ட நிலையில், அவரது தரவரிசை புள்ளிகள் 798-ஆக அதிகரித்துள்ளது. அதிக தரவரிசை புள்ளிகள் கொண்ட 2-ஆவது இந்திய பேட்ஸ்மேனாக இருக்கும் புஜாரா, இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் எடுத்திருந்தார்.
வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, இரு இன்னிங்ஸ்களிலுமாக 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் பேரில் மூன்று இடங்கள் முன்னேறி 19-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். அவரது சக வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த சர்மா, ஓரிடம் முன்னேறி 25-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். பும்ரா 37-ஆவது இடத்திலேயே தொடரும் நிலையில், தரவரிசை புள்ளிகளில் முதல் முறையாக 487-ஐ எட்டியுள்ளார்.
இங்கிலாந்து வீரர்களைப் பொருத்த வரையில், ஆல் ரவுண்டர் சாம் கரன் 29 இடங்கள் ஏற்றம் கண்டு, பேட்ஸ்மேன்கள் வரிசையில் 43-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சாளர்கள் வரிசையில் அவர் 11 இடங்கள் முன்னேறி 55-ஆவது இடத்துக்கு வந்ததுடன், ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் 27 இடங்கள் முன்னேறி 15-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
மொயீன் அலி, பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 3 இடங்கள் முன்னேறி 543 புள்ளிகளுடன் 33-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். அதேபோல் ஆல்ரவுண்டர் பட்டியலில் ஓரிடம் முன்னேறி 7-ஆவது இடத்தை அடைந்துள்ளார்.
பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 15 இடங்கள் முன்னேறி, தனது தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக 32-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் 3 இடங்கள் ஏற்றம் கண்டு 29-ஆவது இடத்துக்கும், கீட்டன் ஜென்னிங்ஸ் 4 இடங்கள் முன்னேறி 86-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.