ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது: விராட் கோலி, மிராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும்...
இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பளு தூக்கும் வீராங்கனை மிராபாய் சானுவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்கள்.
விளையாட்டுத்துறையில் நாட்டுக்கு நற்பெயரை ஈட்டித்தரும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்கள், விளையாட்டு தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு பல்வேறு விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு கோலியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல இந்திய பளுதூக்கும் நட்சத்திர வீராங்கனையும், உலக சாம்பியனுமான மீராபாய் சானுவின் பெயரும் இவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Advertisement
48 கிலோ பிரிவில், மணிப்பூர் இம்பால் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது மீராபாய் சானு உலக சாம்பியன் பட்டத்தையும், காமன்வெல்த் போட்டியில் தங்கமும் வென்றார். முன்னாள் வீராங்கனை குஞ்சுராணியிடம் பயிற்சி பெறும் மீராபாய் சானு, கடந்த 2014-ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த 2017 நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற உலக பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் தகுதி பெற்றாலும் தோல்வியைத் தழுவினார். இதற்கிடையே கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பெண்கள் 48 கிலோ எடைப்பிரிவில் 196 கிலோ தூக்கி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
உள்துறை அமைச்சகத்துக்கு இருவருடைய பெயர்களையும் விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த வருடம், இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பாரா தடகள வீரர் தேவேந்திர ஜஜ்ஜாரியாவுக்கும், இந்திய ஹாக்கி அணி வீரர் சர்தார் சிங்குக்கும் வழங்கப்பட்டது. கேல் ரத்னா விருது பெற்ற முதல் பாரா தடகள வீரர் ஜஜ்ஜாரியா என்பது குறிப்பிடத்தக்கது. அவர், 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக், 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். அதேபோல், கேல் ரத்னா விருது பெற்ற 2-வது ஹாக்கி வீரர் சர்தார் சிங் ஆவார். சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு, நடுகள வீரரான சர்தாரின் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.